Thursday 16 January 2014

ஸ்ரீ முருகன் நாமாவளி -2 (தைப்பூச விசேட பதிவு)

நாமாவளி - 1

வடிவேலா வடிவேலா வள்ளி மணாளனே வடிவேலா
பக்தனைக்காக்கும் பரம தயாளா
பரவசமூட்டும்  எழில் வடிவேலா                      (வடி)
முருகா உன்னையே ஒரு கணமே
உருகி நினைத்தால் போதாதா
விரைவாய் வருவாய் மயில் மீதினிலே
தருவாய் வரமே அருள்வாய் குருவாய்            (வடி)
தமிழே உருவாய் வந்தோனே
தஞ்சம் உனையே அடைதேனே
விரைவாய் வருவாய் மயில் மீதினிலே
தருவாய் வரமே அருள்வாய் குருவாய்            (வடி)
உருவாய் அருவாய் வந்தோனே
தருவாய் நின்றாய் தகையோனே
விரைவாய் வருவாய் மயில் மீதினிலே
தருவாய் வரமே அருள்வாய் குருவாய்            (வடி)

நாமாவளி – 2

கந்தனும் வந்தான் கந்தனும் வந்தான்
            கார்மயில் மீதினிலே
வந்தவன் தந்தான் வாழ்வினில் இன்பம்
            எந்நாளும் வாழ்ந்திடவே                     (கந்த)
சொந்தமாய் வந்தான் சோதனை தந்தான்
            சுகமுடன் வாழ்ந்திடவே
ஸுந்தர ரூபன் அந்தரி பாலன்
            செந்தில்நகர் வேலன்                          (கந்த)
தந்தைக்கு மந்த்ரம் உபதேசம் செய்தவன்
            ஸ்வாமிமலை நாதன்
தந்தையும் தாயுமாய் சந்ததம் காப்பான்
            தணிகை மலை வேலன் – எங்கள்
            தணிகை மலை வேலன்                      (கந்த)
முத்தமிழால் இங்கு வைதாரையும் அவன்
            வாழவைக்கும் தெய்வம்
முந்தைய வினைகள் வேரரருப்பான் எங்கள்
            முத்துக்குமர தெய்வம்                         (கந்த)
சிங்கார வள்ளியும் தேவ குஞ்சரியும்
            பக்கத்தில் நின்றிடவே                       
சங்கடம் தீர்த்திங்கு சஞ்சலம் மாய்ப்பவன்
            சோலைமலை வேலன்                        (கந்த)
அரோஹரா என்று அடியார்கள் கூப்பிட
            ஆடியோடி வருவான்                         
அருக்காத செல்வங்கள் தவராதளிப்பவன்
            ஆவினன்குடி ஆண்டி                         (கந்த)


Sunday 5 January 2014

பாராட்டி சில குறள் வெண்பாக்கள்

உயர்திரு M K மாமா அவர்கள் கீதைக்கு 700 கவி புனைந்துள்ளார். பாராட்டுக்குரிய இச்செயலை பாராட்டி சில குறள் வெண்பாக்கள் இயற்றியுள்ளேன். 

தொடர்க அவர் பணி. – நாக சுந்தரம்

1. தமிழில் கவியை தரமாய் படைக்கும்
  உவந்து உரைத்தேன் சிறப்பு

2. குருவிடம் அன்பும்  வணங்கிடும் பாங்கும்
  தரணி தருமே திடம்                    

3. கருணை கவியதை காதில் கொடுத்து
  அருளை பெறும் பாங்கு  

4. இறைவன் புகன்ற இனிய கவியை (கீதை)
  மறைவாய் மொழிந்த அழகு

5. குருமுகம் பார்த்து குளிர்ந்திடும் உள்ளம்  
  அருளை பெறும் ஆங்கு

7. இனிய கவிதை இனியும் இயற்ற
  முனிய மனம் நோக்கு



Tuesday 31 December 2013

Chapter 16 to 18

16-ம் அத்தியாயம் -  தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்

அச்சம் இல்லாமை, அகத்தூய்மை
ஞானம் பெறும் தியான யோக நிலை நிற்றல்
தானம், புலனடக்கம், பெரியோரை இறைவனை பூஜித்து
வழிபடுதல்!
'
அக்னி ஹோத்ரம்' போன்ற நற்கருமம் கடைபிடித்தல்
மறைகளையும் சாத்திரங்களையும் கற்றல், கற்பித்தல்,
இறைவனின் நாம சங்கீர்தனம் செய்தல்,
சொந்த செயற்பாடுகளில் தோன்றும் துன்பம் பொறுத்தல்,
யாக்கை, புலன் ஆகிய அக நிலைகளில் நேர்மை -
ஸாத்வீகர்களின் இயல்பான இயக்கம் இவையென அறிக!

மனம், மொழி, செயலில் எவர்க்கும் தீங்கு செய்யாமை,
அறிந்த உண்மையை இனிதே கூறுதல்,
தீங்கு இழைத்தாரிடமும் சினம் காத்தல்,
செயற்பாடுகளில் நானே செய்தேன் என்ற கர்வமின்மை,
அசையா மனம், குறை பழி கூறாமை, உயிரினங்களில் பரிவு,
பொருள் பற்று அற்று இருத்தல், அறத்திற்கு புறம்பானவற்றில்
வெட்கம், வீண் செயல் புரியாதிருத்தல்,
இவையெல்லாமும் ஸத் இலக்கணமே!

தெய்வ சிந்தனையிற் பிறந்தோர் -
பொலிவு, பொறுமை, உறுதி, ஏற்கும் சக்தி,
புறத்தூய்மை, பகை பாராட்டாமை,
தற்பெருமை கொள்ளாமை, -
இவற்றையெல்லாம் இலக்கணமாய் கொண்டோர் ஆவர்!
அறிக, அர்ஜுனா!

பகட்டு, அகந்தை, தற்பெருமை, சினம், கொடுமை
அஞ்ஞானம் - இவையாவும் அஸுர குண பிறவிகளின்
இலக்கனம்!

பரகதி அடைய காரணம் தெய்வீகப் பண்பே!
பந்தமான பற்றுக்கு காரணம் அஸுரப் பண்பே!
அர்ஜுனா, நீ பிறந்திருப்பது தெய்வீகப் பண்பில்!
ஆகவே வருந்தாதே, எதற்கும்

அர்ஜுனா, தெய்வப் பண்பு, அஸுரப் பண்பு என 
இருக்கின்றன மனித, உயிரினங்களில் 
தெய்வப் பண்பு குறித்து சொல்லியாயிற்று!
அஸுர இயல்பினையும் கேள், சொல்கின்றேன்!

செய்ய வேண்டியது எது, செய்யக் கூடாதது எது
என அறியாதோர், அஸுர குணமுடையோர்!
புற, அகத்தூய்மை, நன்னடத்தை,
உண்மை விளம்புதல் ஏதுமில்லை அவரிடம்!

உலகம் ஆதாரமற்றதென்றும், பொய்யானதென்றும்,
இறைவன் இல்லாத ஒன்றென்றும், வெறும் ஆண்,
பெண் உறவிலேயே உண்டான காமத்தையே
அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறுவர்
அஸுர குணம் படைத்தோர்!

தவறானவற்றை பற்றி சீரழிந்தோர்
புத்தி மந்தமாகி விட்டார்!
யாவர்க்கும் தீமையே நினைப்போர், கொடுஞ்செயல்
புரிவோர் யாவருமே உலகம் அழிந்தொழியவே முற்படுவர்!

ஆடம்பரம், தற்பெருமை, அகங்கொண்டோர்
எவ்வகையிலும் பற்றுகின்றனர் நிறைவேறா ஆசையை!
பொய்யானவற்றை ஏற்று தூய்மையற்று வாழ்கின்றார்
இவ்வுலகில்!

இறுதி வரை தொடரும் பெருங் கவலையை ஏற்று
அனுபவிக்கும் போகங்களையே நாடுவார்
அஸுர குலத்தார்! சுகமெலாம் இவ்வளவேயென
எல்லை வகுப்பார் அவர்!

ஆசையென்ற கயிற்றினால் பிணைக்கப்பட்டு
ஆசையுடன் சினமும் கூட்டி சிற்றின்ப சுகங்காண
அறமற்ற வழியில் செல்வம் திரட்ட முயலுவார் 
அஸுர குணத்தோரே!

அமையப் பெற்ற பொருளெலாம் என்னாலே,
அடைந்த செல்வமனைத்தும் என்னுடையதே
அயராது கொழிக்குமே செல்வம் மேலும் எனக்கு!
இறுமாறுவார் இப்படியெல்லாம் அஸுர குணத்தோர்!

"
பகைவரை கொல்பவன் நானே! பலரையும் கொல்வேன் நானே!
பரமனும் நானே! பெருஞ்செல்வம் படைத்தோனும் நானே!
ஸித்திகள் பல பெற்று வலிமை மிக்கோன், நானே!
சுகமுடையோனும் நானே!
அரற்றுவான் இப்படியெல்லாம் அஸுர குணத்தோன்!

நிதி படைத்தவன் நான்! நிகர் எவரும் எனக்கில்லை!
பெருமை மிக்கது என் குடும்பம்!
வேள்விகள் செய்வேன், வேணது தானமும் கொடுப்பேன்!
நினைக்கின்ற இன்பமெல்லாம் துய்ப்பேன்!"
இவ்வாறு மோக வலையிற் சிக்கி, அஞ்ஞானம் மிகுந்து
இழிவுற்ற விஷய சுகங்களிற் திளைத்திடும்
ஈனர்கள் யாவரும் அஸுர குலத்தோரே!
இறுதியில் தூய்மையற்ற பாழ் நரகில் வீழ்வாரேயவர்!

தன்னையே உயர்த்தி, செருக்குற்று
தற்பெருமை, பெருஞ்செல்வம் கொண்டோர்
ஆற்றும் பெயரளவிலான யாகம் யாவும்
என்றும் சாத்திர விரோதமேயாம்!

அகந்தை, மமதை, தோள் வலிமை, ஆசை, சினம்
அனைத்தையும் கைகொண்டு தனது, பிற உயிருடலில்
அந்நர்யாயியாக இருக்கும் எனை வெறுக்கின்றனர்
அஸுர குணத்தோர்!
எனை வெறுப்போரையும், பாபம் புரிவோரையும்
கொடியோரையும், மனிதர்களில் கடை நிலையினரையும்
உலகச் சுழற்சியில் மீண்டும் மீண்டும் தள்ளி விடுகிறேன்!

அர்ஜுனா! அஸுர பிறவியெடுக்கின்றனர் இவ்வறிவிலிகள்
ஒவ்வொரு பிறவியிலும் எனை அறிந்து அடையாமலேயே!
இஃதன்றி மிகக் கொடிய பாழ் நரகையும் அடைகின்றனர்!

அஸுரத் தன்மையின் குணங்கள் காமம், குரோதம், பேராசை!
ஆழ் நரகின் நுழைவாயில்!
ஆன்மாவை சிதற வைப்பது!
ஆகவே இம்மூன்றையும் விட்டுத் தள்ள வேண்டும்!

அர்ஜுனா!

காமக்ரோத பேரவா என்ற மூன்று நரக வாயிலினின்றும்
தம்பியோர் அரும் செயல்புரிவர்!
எனையடையும் பெரும் பேற்றையும் பெறுவர்!

சாத்திர நெறி விலகி மனம் சொல்லும் வழிநடப்போர்
எத்திறத்திலும் வெற்றியடையார்!
நித்தியமான எச் சுகமும் பெறுவதில்லை!

செய்யத் தக்கது, தகாதது எது என நிர்ணயிப்பது சாத்திரம்!
சாத்திர முறை செயற்களை ஆற்றிடுவாய் இதையறிந்து!

16-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
………………………………………………………………………………..

17-ம் அத்தியாயம் - ஷ்ரத்யாத்ரய விபாக யோகம்

அர்ஜுனன் கேட்டார் -

கண்ணா! சாத்திர விதிமுறை மீறி, மன உந்துதலில்
ஆற்றும் தெய்வ வழிபாடு ஸத்வமா, ராஜஸமா அல்லது
தமஸா? இது எந்நிலையது?

பகவான் சொன்னார் -

பாமரர்க்கு அறநெறியற்றதாக தோன்றும்!
இயல்பான மன உந்துதல் ஸத்வம், ரஜஸ், தமஸ்
என மூன்று விதமாகவும் உள்ளது. என்னிடம்
கேட்பாயாக, அதன் விரிவை!

எவருக்கும் அவரவர் அந்தக் காரணத்தினின்று ஏற்படும்
ஈடுபாடு! முக்குணங்களில் எந்நிலையிற் ஈடுபாடு
தோன்றுமோ, அக்குணத்தின் உருவேயாம் அம்மனிதன்!

தேவர்களை வழிபடுபவர் ஸத்வ குணத்தோர்!
ரஜோ குணத்தோர் வழிபடுவது யக்ஷ, அரக்கரை!
பிரேத, பூதகணங்களை வழிபடுவது தமோவினர்!

கடுந்தவம் புரிவர் மனம் போனபடி விதிகளை மீறி!
கர்வம், பேராசை, அகந்தை, ஆடம்பரம்,
உடல் வலிமையில் பற்று இவையனைத்தும் அசுர பண்புகள்!

ஐம்பெரும் புலன்கள், அவற்றின் செயல்கள் அனைத்தையும்
உள்ளம் உறையும் பரமாத்மாவான எனையும்
துன்புறுத்தும் அறிவிலிகள் அஸுர பண்புடையோரே!

மனிதர் உண்ணும் உணவு மூன்று வகையாகும்!
யாகம், தனம், தானம் இவை அவரவர்க்கு ஏற்றார்போல்
மூன்று வகைப்படும்!
தனித்தன்மை கொண்ட இவ்வேறுபாட்டை 
அறிந்து கொள் என்னிடமிருந்து!

நலமிக்க அறிவு, ஆயுள், செல்வம், உடல் நலம்,
அன்பு, மென்மை,
நீண்ட நேரம் சரீரத்தில் நிற்கும் மனத்திற்கினியவை
யாவுமே ஸத்வ குணத்தோர் விரும்புவதாகும்!

ரஜோ குணத்தோர், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக சூடு,
காரம் இத்தகைய வரண்ட, எரிச்சலூட்டும் உணவுகளை
உண்டு துன்பம், கவலை, நோய் இவற்றிற்கு
ஆளாகினன்றனர்!

அரை வேக்காடு, ஈரமற்றது, துர்நாற்றம் உள்ளது,
பழைய உணவு, உண்டு மிகுந்தது, தூய்மையற்றது
போன்ற உணவுகளை விரும்புபவர் தாமஸ குணத்தோர்!

மன ஒருமையோடு, பயனில் பற்றின்றி 
சாத்திர விதிக்கேற்ப கடமையாற்றும்
யாகம், ஸாத்வீக யாகம்!

அர்ஜுனா, பகட்டுக்காக ஆற்றும் யாகமும்
பயன் கருதி ஆற்றும் வேள்வியும் ராஜஸமாகும்!

மந்திரமேதுமின்றி சாத்திர முறை மீறி
தட்சினை காணிக்கையுமின்றி, ஈடுபாடின்றி
ஆற்றும் யாகமும், அன்னதானமும் -
'
தாமஸ'மென கருதப்படும்!

தெய்வம், அந்தணர், முதியோர், ஞானியர் இவரை
பூசித்தலும்
தூய்மை, நேர்மை, இந்திரிய அடக்கம் அஹிம்சை இவையும்
உடலால் செய்யக் கூடிய தவமாகும்!
பிறர் மனம் நோகாது இனிதாய் பேசுதலும்
பெரு நலமும் உண்மையதுமான உரைகளும்
சாத்திரம் ஓதுதல், இறைவன் புகழ் பாடுதல்
இவையாவும் வாக்கினால் ஆற்றக்கூடிய தவமாகும்!

மன மகிழ்ச்சி, இயல்பான அமைதி, இடையறா இறை பக்தி
மனவடக்கம், உள்ளத்தூய்மை யாவும் மனத்தவம்
எனப்படும்!

மனம் மொழி மெய்யால் கருத்துடன் யோகியர் ஆற்றும்
பயன் கருதா தவம் ஸாத்வீகமானது!
புகழ்ச்சி, பெருமை, போற்றுதல், தன்னலம், ஆடம்பரம்
பயன் தருமா என நிச்சயமற்ற தன்மை, அழிவுறும்.
உறுதியற்ற தன்மை - இதன் அடிப்படையில்
இயற்றும் தவம் ராஜஸமாகும்!

மனம் மொழி செயற்கு துன்பம் இழைத்து
மற்றோர்க்கும் தீங்கிழைக்கும் தவம் தாமஸமாகும்!
தலையாய கடமையாய், உரிய இடத்தில், உரிய காலத்தில்
தகுதியுடையோர்க்கு கைமாறு கருதாது செய்யும், தானம்
ஸாத்வீகமானது என்பதறிவாய்!

மனம் வருத்தத்தில் இருக்க, கைமாறு கருதி,
பயன் கருதி கொடுக்கும் தானம் ராஜஸமாகும்!

சற்றும் மதிப்பின்றி, இகழ்ச்சியுடன்
தகுதியற்ற இடத்திலும் தகாத நேரத்திலும் 
தகுதியற்ற ஒருவருக்கு செய்யும் தானம் தாமஸமானது.

ஸத் ஸித் ஆனந்தம் 'ஓம் தத்ஸத்' என்ற விதமாக
பிரம்மம் அழைக்கப்படுகிறது!
அப்பிரம்மத்தின் படைப்பில் முதலில் அந்தணர்களும்
வேதங்களும் வேள்விகளும் படைக்கப்படுகின்றன!

மறைகள் விதித்த வேள்வி, தானம், தவம் ஆகிய
செயற்பாடுகள் யாவும் மேன்மையுற்ற 'ஓம்' எனும்
பரமனின் அடைச்சொல்லை உச்சரித்துக் கொண்டே
துவங்கப் பெறுகின்றன!

வீடு பேறு நாடும் நல்லோர் 'தத்' என்று
பரமனுக்கு யாவும் உரியது என்ற உணர்வுடன்
பயன் ஏதும் கருதாது வேள்வி, தவம், தானம்
யாவையையும் பலவாறு செய்வார்கள்!

உண்மையென்றும் நற்சிந்தனையென்றும்
இறைவனின் 'ஸத்' எனும் நாமம் கூறப்படுகிறது!
இவ்வுயர்ந்த மங்களகரமான 'ஸத்' எனும் சொல்
பயன்படுத்தப்படுகிறது நற்காரியங்களில்!

பரமனை பொருட்டு ஆற்றப்படும் வேள்வி, தவம், 
தானம் முதலிய
உறுதி நிலைத்த செயற் நிச்சயமாய்
'
ஸத்' என்றே அழைக்கப்படும்!

கருத்தின்றி செய்யும் வேள்வி கொடுக்கும் கொடை,
ஆற்றும் தவம், மங்கலச் செயற் யாவையும்
'
அஸத்' என்றே கூறப்படும்! இவை
இக, பரத்துக்கும் பயன் தராதவை!

17-
ம் அத்தியாயம் நிறைவுற்றது

…………………………………………………………………………………….

18-
ம் அத்தியாயம் -  மோக்ஷ ஸன்யாஸ யோகம்

அர்ஜுனன் உரைத்தார் -

ஆன்மாவில் உறைபவரே, கேசியை வதைத்த கேசவனே
துறவு, தியாகம் இவைகளை தனித்தனியே
அறிய விரும்புகிறேன்!

ஸ்ரீ பகவான் சொன்னார் -

பொருள் வேண்டி ஆற்றிடும் செயல்களை துறப்பது
துறவு நிலையென கூறுவர் அறிஞர்!
செயலனைத்தின் பயன்களைத் துறப்பது
'
தியாகம்' என்பர் ஆய்வு செய்வோர்!

செயற்பாடுகள் அனைத்தும் குற்றமுடையது!
ஒதுக்கப்பட வேண்டுமென கூறுவர் அறிஞரில் சிலர்!
வேறு சிலரோ, வேள்வி, தவம், தானம் இவைகள்
துறக்கத் தகுந்தது அல்ல என வாதாடுவர்!

மாந்தரில் உயர்ந்தோனே! துறவு, தியாகம் இவற்றில்
தியாகத்தைக் கூறுகிறேன், அறிந்து கொள்!
தியாகமும் ஸாத்வீக, ராஜஸ, தாமஸ குணங்களால்
பிரிக்கப்படுகிறது.

துறக்கத்தக்கவையல்ல வேள்வி, கொடை, தவம்!
தொடர்ந்து ஆற்றப்படும் இக்கருமங்கள் ஸாதகனை
தூய்மைப்படுத்தும்! தவிர்க்காமல் செய்யப்பட வேண்டிய
கருமங்கள் இவை!

பார்த்தா! பயன் பற்றைத் துறந்து வேள்வி, கொடை,
தவம் யாவும் ஆற்றப்பட வேண்டியது கட்டாயம்!

என்னால் உறுதி செய்யப்பட்டது இவ்வுயர்ந்த கொள்கை!
வேண்டாத செயல்கள், பயன் கூட்டும் செயல்கள்
தவிர்க்கப்பட வேண்டும்!
விதிக்கப்பட்ட கருமங்கள் விடுதல் தகாது!
அறியாமையால் இதை துறத்தல் தாமஸ தியாகமாகும்!

விதிக்கப்பட்ட செயல்களனைத்தும் தருமம் என்றறிந்தும்
உடல் வருந்துமென அதை துறப்பானாகில் அதுவே
ராஜஸ தியாகமாகி உண்மையான 
தியாகத்தின் பலனை அடையாமற் போவான்!

அர்ஜுனா! சாத்திரம் விதித்த எக்கருமமும் 
பற்று, பயன் கருதாது செயலாற்றுவது 'ஸாத்வீக'
தியாகம் எனப்படும்!

நலம் கூடா செயலை வெறுக்காமலும்
நலம் கூட்டும் செயலில் பற்றின்மையும் கொண்ட
ஸத்வ குணத்தான் ஐயம் நீங்கிய அறிஞனும்
உண்மையான தியாகியும் ஆவான்!

கருமங்கள் அனைத்தையும் முற்றிலும் துறக்க
இயலாது, எவராலும்!
கருமத்தின் பலன் அனைத்தையும் எவன் துறக்கிறானோ,
அவனே தியாகம் செய்பவன், எனப்படுவான்!

கரும பலன்களை துறந்து பயன் கருதாது
செயல் புரிவோர்க்கு 'கரும பலன்' ஒருபோதும் ஏற்படாது!
கரும பலனை துறக்காதவர்க்கு அதனின்
நல்ல, தீய, இரண்டும் கலந்த பலன்கள்
இறந்தபின் தவறாது கிடைக்கும்!

அகன்ற தோள் வலிவுடையேனே!
ஐந்து வித காரணமுண்டு, செயலனைத்தும் புரிய!
அறிந்துகொள் என்னிடமிருந்து, நன்கு!

உடல், செயலாற்றும் திறன், புலன்கள்,
உபகரணங்கள், இறைவனின் கருணை
இவ்வைந்தும் காரணமாம் செயலெலாம் நிறைவேற!
மனம், சொல், உடலினால், சாத்திரங்களுக்கு
இணக்கமுடனோ, அதற்கு முரனாகவோ செயல்படுதலுக்கு
இவ்வைந்தும் காரணமாகும்!

புத்தித் தெளிவற்று, தூய ஆன்மனையே செயற்புரிவோனாக்
கருதுபவன் எவனோ, அந்த அஞ்ஞான அறிவிலி
உண்மையை புரிந்து கொள்ளாதவன்!

எதைச் செய்யினும் தான் செய்தேன் என அகந்தையற்று
போதையேற்றும் உலகியற் பொருளிலும் செயலிலும்
எவனது புத்தி ஒட்டுவதில்லையோ
அவன் மக்களை கொன்றாலும், உண்மையில்
அவன் கொல்பவனாகமாட்டான்!
அந்த பாவத்தில் அவன் தள்ளப்படுவதுமில்லை!

அறிபவன், அறிவு, அறியப்படுவது இம்மூன்றும்
அவனின் செயலினை தூண்டுபவை!
செயற்புரிவோன், கரணங்கள், செயல் இம்மூன்றும் ஒன்று சேர
செயல் வடிவமாகிறது!

ஞானம், செயல், செய்பவன் இம்முன்றும்
குணங்களின் ஸாங்க்ய சாத்திரத்தில்
கூறப்படுகின்றன மும்மூன்றாக!
அறிந்துகொள் இதையும் என்னிடம்!

தனித்தனி உயிரினங்களிலும் அழிவற்ற ஒரே பரமனாக
பிரிவற்றதும், சமமும் ஆக இருக்கும் எனை அறியும்
ஞானத்திற்கு 'ஸாத்வீக ஞானம்' என கொள்வாயாக!

உயிரினமனைத்திலும் இருக்கும் ஆன்மனை 
தனித்தனியான, ஒரு வித்தியாஸமான
வேறுபாடுடையோன் என
எனையறியும் மனிதனின் ஞானம் ராஜஸமானதாகும்!

மாயப்ரக்ருதியின் சக்தியால் விளைந்த உடல் தான்
அனைத்தும் என பற்று கொண்ட ஞானம்
உண்மைக்குப் புறம்பான, யுக்திக்கு பொருந்தாத ஒன்று
அற்பமான இக்கருத்து தாமஸமானதாகும்!

சாத்திரம் விதித்த செயல்களை விருப்பு வெறுப்பின்றி
நான் செய்கிறேன் என்ற அகந்தை சிறிதுமின்றி
பயன் என்றும் கருதாது - ஆற்றுவது ஸாத்வீகமானது!

கடும் உழைப்பினாலும் போகப்பொருளில் ஆசையுடனும்
அகந்தை கொண்டு செய்யும் செயல்களனைத்தும்
'
ராஜஸ'மாகும்!

விளைவு, இழப்பு, துன்பம், திறமை
இவற்றை ஆராயாது அஞ்ஞானத்தில் துவங்கும்
செயலனைத்தும் 'தாமஸம்' எனப்படும்!

பற்றறுத்து, அகந்தையில் பேசாது,
உறுதி ஊக்கம் கொண்டு செய்யும் செயலில்
கைகூடல், கைகூடாமையில் மகிழ்வோ, துயரமோ
அடையாது விளங்குபவனே 'ஸாத்வீக' இலக்கணம்
கொண்டோன் ஆவான்!

பற்று, செயற்பயன் வேண்டல், பேராசை
பிறரை வருத்தும் குணம், தூய்மையற்றிருப்பது,
மகிழ்வு, துயரில் மாறி மாறி பாதிக்கப்படுவது -
இதெலாம் 'ராஜஸ' குணத்தோன் செயல்!

கட்டுப்பாடற்ற மனம், புலன் அறிவு முதிர்ச்சியடையாதோன்
அகந்தை வஞ்சம் நிறைந்தோன், பிறர் வாழ்வை கெடுப்போன்
என்றும் கவலையுடையோன், சோம்பித் திரிவோன்
'
தாமஸன்' ஆவான்!

அர்ஜுனா! புத்தி மனதிற்கு ஏற்படும் முக்குண பாகுபாட்டை
முழுமையாக, தனித்தனியாய் நான் கூறப்போவதை
கேட்டறிவாய்!

ஆக்க வழியையும் விடுதலை வழியையும்
செய்யத் தகுந்தது எது, தகாதது எது என அறியும்
அறிவையும் அச்சம் தைரியத்தையும், தளைகளையும்
முக்தியையும் உண்மையாக அறியும் புத்தியே
'
ஸாத்வீக'மானது!

அறம், மறம், செய்யத்தகுந்தது எது, தகாதது எது என
இவையனைத்தியும் உள்ளவாறு அறியாதவன் புத்தி
'
ராஜஸ'மாகும்.

அறமற்றதை அறமென்றும், எப்பொருளிலும்
அப்பொருளின் இயல்புத் தன்மைக்கு மாறாக
நினைப்பதும் 'தாமஸ'மாகும்.

அர்ஜுனா! இறைவனைத் தவிர வேறெதுவும்
சிந்தியாது தியான யோகத்தினால் மனம், புலன்
இவற்றின் செயல்களை நிலை நிறுத்தும் உறுதி
'
ஸாத்வீக'மாகும்!

பார்த்தா! பயனில் விருப்புற்று, பற்றோடு
அறம், பொருள், இன்பம் அடைவதில் உறுதியாயிருப்பது
'
ராஜஸ' உறுதியாம்!

தூக்கம், அச்சம், கவலை, துயர், செருக்கு
இவைகள் விடாமல் பற்றிக் கொண்டுள்ள உறுதி -
'
தாமஸ' உறுதியாகும்!

சுகமதில் மூன்றுண்டு! பஜனை, தவம், தொண்டு
இதனில் மகிழ்பவன், இன்னலின் முடிவையும் அறிபவன்,
இந்நற் சுகமனைத்தும் தொடக்கத்தில் நஞ்சாகத் தோன்றினும் 
விளைவு அமுதமாகவே இருக்கும்!
இறைவன் குறித்த தெளிந்த அறிவினால் உண்டாகும்
இச்சுகம், ஸாத்வீகமானது என்று அறிக!

போகப் பொருளினை நாடும் புலன்களின் சுகம்
பேரின்ப அமுதாக இருப்பினும் விளைவோ நஞ்சாகும்!
அறிவாய் இச்சுகம் 'ராஜஸ'மாகும்!

சோம்பல், உறக்கம், கவனமின்மை காரணமாக உண்டாகும்
சுகம் அனுபவிக்கும் போதும், அதன் முடிவிலும் காணும்
விளைவுகள் ஆன்மாவை மயக்கமுறச் செய்யும்!
இம்மாய சுகத்திற்கு 'தாமஸ' சுகம் எனப் பெயர்!

இயற்கையில் ஏற்பட்ட மூன்று குணங்களினின்றும்
விடுபட்டதாக எந்த உயிரினமோ, நில உலகோ,
வானத்திலோ, வானவர்களிலோ, வேறு இடத்திலோ
எங்குமேயில்லை, அறிக!

இவ்வியல்பிற்கான குணங்களுக்கேற்ப
அந்தணர், வைசியர், க்ஷத்திரியர், நான்காம்
வருணத்தவர்களின் செயல்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன!

மனம், புலன் அடக்குதல், குலதர்மம் காக்க துன்பம்'
பொறுத்தல்
மனம், புலன், மெய்யில் நேர்மை, மறை அறிவு
இறைப்பற்று, இறைஉலகு இவற்றில் நம்பிக்கை
மறைகளைக் கற்று பிறர்க்கும் ஓதுதல், இறைதத்துவம்
அறிந்து மகிழ்தல், இவையெனைத்தும்
அந்தணர்களின் கருமங்களே!

வீரம், முக ஒளி, உறுதி, திறன், புறங்காட்டா
போர்த்திறன், கொடை, ஆளுந்திறம் இவையனைத்தும்
இயல்பான குணமே, க்ஷத்திரியர்களுக்கு!

உழவு, பசுக்களைக் காத்தல், பொருள் வாங்கி விற்கும்
நேர்மையான வணிகம், இவையாவும் வைசியர்களின்
இயல்பான தருமங்கள்! அனைவர்க்கும் தொண்டு புரிதல்
நான்காம் வருணத்தாரின் இயல்பாம்!

அவரவர் கடமையை கருத்துடன் செய்வோர்
பரமனை அடையும் சக்தியைப் பெறுவர்! இதை
அவர்கள் எவ்விதம் செயலாற்றி பரமநிலையை
அடைகின்றனர் என்பதை நீ கேட்பாயாக!

அகிலமெல்லாம் நிறைந்து நின்று உயிரினங்கள்
அனைத்தையும் உண்டாக்கும் பரமாத்மாவை
இயல்பான தன் கடமைகள் மூலமாய் வழிபட்டு
அனைத்து சித்திகளையும் அடைகிறான், மனிதன்!

முறைபடுத்தப்பட்ட பிறரின் தருமத்தைக் காட்டிலும்
குறையிருந்தும் தன் சுய தருமமே உயர்வாகும்!
இயல்பிற்கேற்ப விதிக்கப்பட்ட தன் கடமைகளை
ஆற்றும் மனிதன் பாவத்தை அடையான்!

குந்தி மகனே, குறை பல இருந்தும் தமக்குரிய
இயல்புடை கடமையை விடலாகாது!
தீயை சூழும் புகை போல் எக்காரியங்களிலும்
ஏதோ ஒரு குறை இருந்தே தீரும்!

பற்றற்று அசையா மனத்தொடு உள்ளத்தை அடக்கியவன்
கர்ம யோகத்தினால் கர்மங்களினின்றும் விடுபட்டு
பெறு நிலையை அடைகிறான்!

ஞான யோகத்தின் உயர்ந்த நிலையில் 
காணும் ஸித்தியை அடைந்தோன்
பரப்பிரம்மத்தை எப்படி சேருகிறானோ
சுருக்கமாக அதை அறிந்து கொள் என்னிடம்!

தூய அறிவு, எளிய சாத்வீக உணவு, புலன் நுகர்
பொருள் துறந்து
தூய தனி இடம் அயர்ந்து தியானித்து,
உளம், புலன் உறுதியுடன் அடக்கி
மனம், வாக்கு, உடல் தன் வசம் நிறுத்தி
விருப்பு வெறுப்பற்று திடமான வைராக்யத்துடன்
அகந்தை, வன்மை, காமம், சினம் போக்கி
பொருள் சேர்க்கையின்றி, எப்போதும் திடமான
நிலையில் இருந்து அமைதி காப்பவன், 
ஸத், சித், ஆனந்த மயமான பரப்பிரம்மத்தில்
இரண்டறக் கலக்க தகுதி பெறுகிறான்!

நிறைந்த ஆனந்தமயமான ப்ரும்மத்திடம்
ஒன்றிய மனத்தெளிவுடைய யோகியர்
வருந்துவதில்லை எதற்கும்! எதையும்
எதிர்பார்ப்பதுமில்லை! அனைத்துயிரிலும்
ஒரே நிலை அன்பு கொண்டு எனது
பரந்து நிற்கும் பக்தியினை பெறுகிறார்!

பரா பக்தியினால் பரமனான எனை யாரென்றும்
எத்தன்மை உடையோனென்றும் உண்மையில்
உள்ளது உள்ளபடியே தத்துவரீதியாய் அறிகிறார்!
என்னையும் அடைகிறார், அவ்வாறே!

முற்றிலும் எனையே புகலடைந்த கர்மயோகி
எந்நேரமும் செயலாற்றிக் கொண்டிருப்பினும்
நிலையான என்றுமுள்ள அழியா பரமபதத்தை
அடைகிறார் என்னருளால்!

உன் செயலனைத்தும் என்னிடம் சேர்த்துவிடு!
உயர்ந்த சமநோக்கு யோகத்தால் சரணடந்துவிடு,
எனையே!
உள்ளத்தை என்றுமே பதித்து விடு, என்னிடம்
அர்ஜுனா!

என்னிடம் உள்ளம் பதித்துவிட்டால்
என்னருளால் இன்னல்கள் கடந்திடுவாய்!
இஃதன்றி மமதையால் என் சொல் ஒதுக்கினால்
வீழ்ந்திடுவாய் வீணே! பெறமாட்டாய் பெருநிலை!
அறிவாயே!

போர்புரியேன் என்று எந்த அகந்தையில் சொன்னாயோ
அது பொய்!
ஏனெனில் உன் இயல்பு உனை வலுவில் போரினில் 
ஈடுபடுத்தும்!

குந்தி மகனே! மன மயக்கத்தினால் உன் கடைமையான
போர் புரிதலில் செய்ய விரும்பவில்லையெனினும் 
இயல்பான உன் கர்ம வினையினால் உந்தப்பட்டு
உன் வசம் இழந்து அதையே செய்யப் போகிறாய்!

யாக்கையெனும் பொறியினிலே ஈர்க்கச் செயும்
அனைத்துயிர்களையும் தன் மாயையினால்
அவரவர் செய்த வினைக்கேற்ப சுழலச்செய்து,
யாவற்றின் இதயத்திலும் வீற்றிருக்கிறான் இறைவன்!

பரதகுல தோன்றலே! எந்நிலையிலும்
பரமனையே தஞ்சமடைந்து விடு!
அருமந்த அவனின் அருளினாலே நிறைந்த
அமைதியும் நிலையான பரமபதத்தையும் அடையலாம்!

மறை பொருளுக்கும் மறை பொருளான
ஞானம் அறிந்து கொண்டாய் என்னால்! இந்த
ஞானத்தை நன்கு ஆராய்ந்து அறிந்து
விருப்பம் எதுவோ, அதையே செய்!

மறைக்கும் மறையான என் ரகசிய உரையை
மீண்டும் கேள்!
உற்ற நண்பனான உனக்கு மேலான நன்மை பயக்க
இவ்வுரையையும் உனக்குக் கூறுவேன்!

அர்ஜுனா! மனதை என்னிடமே செலுத்து!
எனையே பக்தி செய்! எனையே வழிபட்டு வணங்கு!
எனையே அடைவாய் முடிவில்! இது உறுதி!
ஏனெனில் என் அன்புக்கு உரியவன் நீ!

உன் செயல், கடமை யாவற்றையும் சேர்த்துவிடு என்னிடம்!
யாவற்றிற்கும் ஆதாரமான பரமேஸ்வரனான 
எனையே சரண் அடைந்திடு! உன்
வினைகள் அனைத்தினின்றும் விடுவிப்பேன் நான்!
வருந்தாதே!

உனக்கு கூறப்பட்ட கீதோபதேசத்தை
தவமற்றவர்க்கும், பக்தி இல்லாதவர்க்கும்
கேட்க விருப்பமற்றவர்க்கும், என்னிடமே
குறை காண்பவருக்கும் ஒருபோதும் சொல்லாதே!

என்னிடம் ஆழ்ந்த பக்தி செய்து மிகவும்
உயர்வான இந்த கீதா சாஸ்திரத்தை
என் பக்தர்களுக்கு யார் சொல்வாரோ,
என்னையே அவர் எவ்வித ஐயமுமின்றி அடைவார்!



என் பக்தனான இவனைவிட வேறு எவரும்
நான் விரும்பும் செயல்களை ஆற்றக்கூடியவர்கள்
யாருமில்லை!
அவனைக்காட்டிலும் பூமியில் எனக்கு மிகவும்
அன்புக்குரியவன் யாருமில்லை!

அறவழியான நம் இருவரின் உரையாடலான 
பேருரை கீதா சாத்திரத்தை எவன் கற்கிறானோ
அவனாலும் நான் ஞான வேள்வியினால்
வழிபட்டவனாவேன் என்பது உறுதி!

குறை காணாது நம்பிக்கையுடன் இக்கீதா சாத்திரத்தை
கேட்கவாவது செய்யும் எந்த மனிதனும் 
புண்ணிய சீலர்கள் அடையும் புண்ணிய
உலகினை அடைவான்!

அர்ஜுனா! இந்த கீதை பேருரை உன்னால்
ஒன்றுபட்ட மனதுடன் கேட்கப்பட்டதா?
அஞ்ஞானத்தினால் உண்டான உன் மோஹம்
அழிந்துபட்டதா?

அர்ஜுனன் சொன்னார்!
அச்சுதனே என் மோஹம் அழிதது உனதருளால்!
ஞான ஒளி பெற்றேன்! ஐயமேதுமின்றி
உறுதியுடன் நிற்கின்றேன்!
உங்கள் ஆனையை நிறைவேற்றுவேன், கண்ணா,
நிறைவேற்றுவேன்!

ஸஞ்சயன் சொன்னார்!
பகவான் கண்ணனுக்கும், பரம பக்தனான பார்த்தனுக்கும்
இடையே நிகழ்ந்த அற்புதமான உட்பொருள் கொண்ட
மனம் புல்லரிக்கக்கூடிய உரையை நானும் கேட்டேன்!

ஸ்ரீ வியாசரின் அருளினால் பெற்ற தெய்வீகப்
பார்வையினால், உயர்ந்த, ரகசியமான
பார்த்தனைக் குறித்து சொல்லுகின்ற இந்த
யோகத்தை, நேரிடையாகக் கேட்டேன்
யோகேஸ்வரனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடமிருந்து!

அரசே, கண்ணனுக்கும் பார்த்தனுக்கும்
இடையே நடந்த அதி ரகசியமான
நலம் பயக்கும் அற்புத உரையை நினைத்து நினைத்து
மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன்!

அனைத்து பாவங்களையும் போக்கும் ஸ்ரீ ஹரியின்
அற்புத அழகிய திரு உருவை நினைத்து நினைத்து
பெருவியப்படைகிறேன் மனதில்! மேலும் மேலும்
பெரு மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!

அரசே! இனி நான் என்ன சொல்ல?
கருணை மிக்க கண்ணபிரானும்
காண்டீபன் ஏந்திய அர்ஜுனனும் எங்கிருதாலும்
அவ்விடத்தில் நிலவும் வெற்றியும், பெரு நிதியும்,
நிலைத்த நீதியும் இருக்கும் என்பது எனது
முடிவான எண்ணம்!

பிரும்மவித்யை, யோக சாத்திரம், உபநிடதம் என
போற்றப்படும் ஸ்ரீமத் பகவத்கீதையாகிய
ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையே
நிகழ்ந்த உரையாடலில், முக்தி, துறவு
யோகமெனும் பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.


ஸ்ரீ பரமாத்மனே நம: சுபம், சுபம், சுபம்!