Monday 30 December 2013

கவிதையில் கீதை - அருட்சக்தியின் ஆசியுரை

ஸ்ரீகுருப்யோ நம:
கவிதையில் கீதை
எழுதியவர் :
இடைமருதன் என்ற புனைப்பெயருடைய மு.கிருட்டினமூர்த்தி
(ஸ்ரீகருணாநந்தநாதர்)
ருதம்பரா ஞான ஸபா, நங்கைநல்லூர்
அருட்சக்தியின் ஆசியுரை:
கீதைக்கு கவிதையுரை கண்ட கருணாகரனே!
பாதைக்கு கரைகண்ட இடைமருதா - மேதை
தாதைக்கு பெயர்கொடுத்த தயாளா தத்துவனே
மேதையாகும் உனது மனம்.
ஸ்ரீமத்பகவத்கீதை என்பது உபநிஷதம் போன்றது என்பர். உபநிஷதம் என்றால் வேதங்களின் அந்தம். அதாவது வேதங்களின் முடிவு. நான்கு வேதங்களின் ஸாரம் அவை. வேதங்களோ மிகவும் பெரியன. ஒருவர் தன் ஆயுள்காலத்தில் கூட முழுவதும் படிந்தறிய முடியாது. பிற்காலத்திய நம் போன்றோரின் நலத்தில் கவனம் கொண்ட மஹரிஷிகள் அந்த வேதங்களின் ஸாரத்தை உபநிஷதங்களாக கொடுத்தார்கள். அவை 1008 என்றும் 108 என்றும் சொல்வர். இந்த 108 உபநிஷதங்களின் ஸாரமாகத்தான் கண்ணன் கீதையைக் கொடுத்தான். இது மஹாபாரதத்தில் ஒரு பகுதி. நம்போன்ற ஜீவனின் பிரதிநிதியாக அர்ச்சுனனை முன்வைத்து இதனை கண்ணன் சொல்கிறான். கண்ணன் சொல்கிறான் என்றுதான் எல்லோரும் கூறுகிறோம். ஆனால் மஹாபாரதக் கதையை எழுதிய ஸ்ரீவியாஸபகவானை மற்ற கதைப்பகுதி வரும் இடத்தில் குறிப்பிடுகிறோமே தவிர கீதை என்று கூறும்போதெல்லாம் கண்ணன் என்றே சொல்வதைக் காணுகிறோம். ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்றால் வியாஸரின் அவதாரமே ஸ்ரீமன் நாராயணனின் அம்சம்தானே! கதையும் அவரே! கருத்தும் அவரே! இதைத்தானே கீதையிலும் சொல்லப்படுகிறது. 'போர் செய்பவனும் நீயே! அடிப்பவனும் நீயே! இறப்பவனும் நீயே!' என்று.
இந்த தள்ளாத வயதில் இந்த கீதாபாஷ்யத்தை எழுதவேணுமென ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி அய்யர் ஏன் விரும்பினார்? இதுதான் பயன் கருதா கர்மம் என்பது. அவர் தன் இளவயது தொட்டே கவிதைகள், பாடல்கள் என எழுதுபவர். கையெழுத்து பத்திரிகை கூட நடத்தியுள்ளார். கடமையில் கருத்துள்ள அவர் கவிதையிலும் சிறந்த படைப்பாளி. அவரது பாடல்களில் சில நமது வைகரி இணையதளத்தின் ஸத்ஸங்க பகுதியில் படித்துள்ளோம். அவர் தனது மனசாந்தி நிமித்தம் எழுதிய இந்த கீதையின்உரை போன்ற தமிழ்க் கவிதைகள் மிக அழகும் அர்த்தபுஷ்டியும் கொண்டதாக உள்ளன.
ஸ்ரீமத்பகவத்கீதையின் சில பகுதிகளை நாம் இங்கு அலசிப்பார்க்கிறோம்.
இதயம் தெளிந்தாலன்றி புத்தி தெளியாது. இதயத்தில் பரிபூர்ண சுத்த நிலையேற்படும் வரை புத்தி இடையிடையே தெளிந்தாலும் மீண்டும் மீண்டும் குழம்பிப்போய்விடும். உடலால் செய்யும் தொழில் மட்டுமே தொழிலில்லை. மனதால் செய்வதும் தொழிலே. ஜபம், படிப்பு, மனனம் ஆகியவை மனத்தொழிலே! சட்டமும், வேதமும், கவிதையும், காவியங்களும், கதைகளும் மனதால் செய்யும் தொழிலே அல்லவா! அதனால் அறிவுத்தெளிவை கலங்கவிடாதே! யோகம் பயில். அதாவது ஒரு தொழிலுக்கு தன்னை தகுதியுடையவனாகச் செய்துகொள்வதே யோகம் என்பதாம். நான் யார்? என்ற விநாவுக்கு விடையாக அமையும் அத்தனை சிந்தனைகளையும் தொகுத்தால் மிகுவதே நான்தான். நம்மை அறியவே ஏற்பட்டது கீதை. அது ஏதோ வயதானவர்கள் பொழுது போகாமல் பல இடங்களுக்கு கீதாவகுப்புக்கு செல்வதாக இன்றைய இளையதலைமுறைகள் நினைப்பது நமக்குத் தெரியும். முக்கியமாக இளைஞர்கள்தான் அங்கு செல்ல வேண்டியவர்கள் என்பேன். 'இளமையில் கல்' என்ற ஒளவையின் வாக்கு அப்போதுதான் செயலுக்கு வரும். கடமை முடிந்த வயதானவர்கள் கீதையில் கூறிய அனேக நெறிமுறைகளை செயல் படுத்த முடியாதவர்கள். எனவே இன்றைய இளையதலைமுறைகள் அவசியம் கீதாவாசகத்தை பின்பற்றவேணும். நமது சுப்ரமணிய பாரதியார் அவர்களும் மிக எளமையான உரை ஒன்று எழுதியுள்ளார். இதுபோன்ற எளிமையான உரை விளக்கங்கள் இளையதலைமுறைகளுக்கு தேவைதான். ஓன்றுமே செய்யாமல் இருப்பதை விட மனச்சாந்திக்காக என்றோ மோஷத்துக்காக என்றோ இந்த செயலில் ஸ்ரீகிருஷ்ணமூர்த்திஅய்யர் இறங்கியிருப்பதாலே நிச்சயம் இது ஒரு பயனள்ள செயலே! இது அவருக்கு மட்டும் மனச்சாந்தி தரப்போவதில்லை. இதனை படிக்கும் அனைவருமே இதனை அனுபவிக்கலாம். ஏனெனில் கீதை அத்தகையது. இதுவரை எத்தனை பாஷைகளில், எத்தனைவிதமாக கவிதைகயாக. பாட்டாக. வசனமாக என்று வந்துவிட்டன. அத்தனையும் மக்களுக்கு இன்று வரை பயன்பட்டுவருகின்றனவே! எனது சீடர் இதனைச்செய்தார் என்பதால் எனது குருமண்டலத்துக்கே இது பெருமை. எனவே இது அனைவருக்கும் பயன் படவேணுமென்று எல்லாம் வல்ல குருமண்டலத்தை பிரார்த்தித்து அமைகிறேன்.
உங்கள் அன்புள்ள,
அருட்சக்தி நாகராஜன்
ருதம்பரா ஞான ஸபா
புதுடில்லி

No comments:

Post a Comment