Monday 30 December 2013

M. Venkataraman யின் பாராட்டு

ஸ்ரீ ராம ஜெயம்
கண்ணனின் கீதை - இடைமருதன் (மு.கி.யின் )
வசன காவியம்
M. Venkataraman யின் பாராட்டு
கண்டேன், கண்ணனைக் கண்டேன் .
முத்து ஜோசியர், செல்லம்மாவின் 7வது மழலையாகக் கண்டேன்
தலையில் சிறு கொண்டை , உடலை அழகிற்கு அழகு செய்யும் அணிகளுடன் ,
அழகாக தத்தித்தத்தி நடந்து வரும் கிருஷ்ணமூர்த்தியைக் கண்டேன்,
சிறு பாலகனாக, குறும்பு தனத்துடன்,
பள்ளி செல்லும் பிள்ளையாகக் கண்டேன்.
இளைஞனாக, கலைஞனாக,
பாசமுள்ள கணவனாக, பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக,
பாசமுள்ள தந்தையாக, பாட்டனாக,
ஆன்மீகவாதியாக, ஸ்ரீ தேவி உபாசகனாக கண்டிருக்கிறேன்!
கீதாசாரியனாக, இடைமருதூரனாக இன்று காண்கிறேன்,
பரவசப்படுகிறேன், பாராட்டுகிறேன்.
வாழ்க, வளர்க, உயர்க!
உன் ஆன்மிக பணிகள் தொடர்க!
கதை: மகாபாரதம்
களம்: போர்க்களம்
பாத்திரங்கள்: ஸ்ரீ கிருஷ்ணர், பார்த்திபன்.
இடம்: தேர்த்தட்டு
நேரம்: ஆதவன் உதித்து விட்டான்,
கீழ் வானில் பவனிவருகிறான்.
பாரதப்போர் துவங்க உள்ளது, சங்கம் ஒலிக்கிறது
முரசுகள் முழங்குகின்றன .
படைகள் அணிவகுத்து நிற்கின்றன
கண்ணன் தேரோட்டியாக, பார்த்தன் போர்வீரனாக.
அங்கே உதிக்கிறது கண்ணின் கீதோபதேசம்.
யாருக்கு?
துவண்டு, பாசம், பற்று இவற்றால் பீடிக்கப்பட்டு
யுத்தம் செய்ய மனமில்லா அர்ஜுனர்க்கு,
அவன் வழியே நமக்கு
இவ்வுலகில் பாசம், பற்று, ஆசை, பொறாமை இவற்றால் பீடிக்கப்பட்டு
தவிக்கும் நமக்கு !
கடினமான மேல் உறை, ஓடு, முட்கள் நிறைந்த வெளிப்பக்கம்,
கைக்கு எட்டாத ஒரு கனி.
இதையாவது, நாம் பறிப்பதாவது,
சுவைப்பதாவது என்று ஏங்கி , பதுங்கி, ஒதுங்கி ஓடியவனை
கவர்ந்து, இழுத்து, படிக்க வைத்து,
எனக்கு ஓரளவு அறிவையும், தெளிவையும் கொடுத்து,
என்னை அடுத்த பயணத்திற்கு ஓரளவு தயாராக்கிய பெருமை ,
இடைமருதனின்
காவிய கீதைக்கு உண்டு என்று
ஒப்புக்கொள்கிறேன்
பற்று அற, பாசம் அற,
அகந்தை நீக்கு, ஆசை அகற்று,
கடமையைச் செய், பலனைக் கருதாதே,
உடல் வேறு, ஆன்மா வேறு,
உடல் அழியக்கூடியது,
ஆன்மா அழிவற்றது.
புலன்களை அடக்கு, சினத்தை ஒடுக்கு,
நல்லதையே நினை,நல்லதையே செய் ,
இறைவனையே நினை, இறைவனையே சரண் அடை,
எல்லாம் அவனே! எதிலும் அவனே !
நம்மிலும் அவனே! நம்மை நடத்துபவனும் அவனே!
நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நாட்டவுமே அவன் தோன்றுகிறான்.
காலங்களில் அவன் வசந்தம் ,
மாதங்களில் அவன் மார்கழி,
வேதங்களில் அவன் சாமவேதம்!
பிறப்பு, இறப்பு அவன் செயல்,
காப்பது அவன் கடமை,
பின் ஏன் நமக்கு கவலை?
கடல் நீரை கைக்குள் அடக்க முடியுமா?
கீதையின் சாரத்தை முழுமையாக அறிய முடியுமா?
இவை நான் அறிந்தவைகளில் சில
முழுமையும் படித்தேன், சுவைத்தேன், ரசித்தேன், களித்தேன்.
கண்டேன் ஸ்ரீ கிருஷ்ணனின் விஸ்வரூபத்தை.
வேறு ஏதும் வேண்டேன் !
உன் திருவடிகள் தனையே சரணடைய வேண்டுகிறேன்.
ஈஸ்வரோ ரக்ஷது !
லோகாஸ்ஸமஸ்தாஸ் சுகிநோபாவந்து!

No comments:

Post a Comment