Tuesday 31 December 2013

Chapter 13 to 15

13-ம் அத்தியாயம் - க்ஷேத்ர, க்ஷேத்ரஞ்ய விபாக யோகம்

ஸ்ரீ பகவான் கூறினார் -

இவ்வுடலின் பெயர் க்ஷேத்ரம்! இதை அறிபவனே
இனிய க்ஷேத்ரஞ்ஞன் என கூறுவர் தத்துவப் பெரியோர்!

அர்ஜுனா! எல்லா உடல்களிலும் ஜீவான்மா நானே!
விகாரமான ப்ரக்குருதியையும் புருஷனையும் பற்றிய
தத்துவ ரீதியான ஞானமே பரமஞானம் என்பது!

அந்த உடல் (க்ஷேத்ரம்) எது, எத்தகையது
எந்தவித விகாரம் கூடியது?
அந்த ஆத்மன் (க்ஷேத்ரஞ்யன்) யார்?
அவனது பெருமை யென்ன?
அனைத்தையும் கேள் என்னிடம், சுருக்கமாக!
முனிவர்களால் கூறப்பட்டுள்ளது யாக்கையும்,
ஆன்ம தத்துவமும்!
மிக மேன்மையாக உறுதி செயப்பெற்ற 'பிரம்மசூத்திரம்'
விளக்கம் செய்கிறது இத்தத்துவத்தை!

ஐம்பெரும் பூதங்கள், ஆணவம், புத்தி, மூலப்ரக்ருதி,
புலன்கள் பத்து, மனம், அதனைச் சார்ந்த பொருள்
இவையாவும் இவ்வுடலை (க்ஷேத்ரம்) சார்ந்ததே!

விருப்பு, வெறுப்பு, இன்ப துன்பம், உடல் நிலை
உறுதி, சைதன்ய சக்தி - இவையாவும்
மாறுபாடுள்ள உடல் (க்ஷேத்ரம்) என 
சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.
தற்புகழ்ச்சியற்ற நற்பண்போடு இருத்தல்
ஒரு போதும் சொல்லாலும் உயிரினத்தை வருத்தாது
இருத்தல்
என்றும் சொல்லிலும் செயலிலும் நேர்மை, 
பொறுமை, புலன், உடல் கட்டுப்பாடு,
கருத்துடனும் பக்தியுடனும் செய்யும் பெரியோர் சேவை
உள்ளும் புறமும் தூய்மை, மற்றும் உறுதி,
மேலுலகு, இவ்வுலக சுகங்களில் பற்றறுத்தல்
மனங்கெடுக்கும் தானென்ற கருவம் அற்று இருத்தல்,
பிறப்பிறப்பு, மூப்பு, நோய் என்ற தீரா துன்பமனைத்தும்
திரும்பத் திரும்ப சிந்தித்துப் பார்த்தல்,

மனைவி, மக்கள், செல்வம் இவற்றில் பற்றின்மை,
தான், தனது என்ற கருவமேதுமின்றி இருத்தல்,
வேண்டுதல் வேண்டாதவற்றில் சமநிலை காத்தல்,
வேறொன்றும் வேண்டாது என்னிடம் பிறழா
பக்தியில் திளைத்தல்,
புறத்தூய்மையுடன் தனிமை வேண்டுதல்
உலகியல் விருப்பங் கொண்டவரோடு
இணையாதிருத்தல்,
தீவிர ஆன்ம விளக்கத்தில் திளைத்தல்
தத்துவப் பொருளான பரமனை தரிசித்தல்
இத்தனையும் ஞானமே! பிரிதெல்லாம் அஞ்ஞானமே!
எதை அறிந்து அதனால் பரமானந்தத்தை அடைவரோ,
அதை விளக்குவேன்!
ஆதியும் அந்தமும் அற்ற அப்பரமனை
அஸத் என்றும், ஸத் என்றும் கணிக்க இயலாது!

பாரெங்கும் பரந்து நிற்கும் பரமனுக்கு
பக்கமெல்லாம் கை, கால்கள், கண்கள், தலை
முகம் எங்கும் உண்டு, அறிக!

புலன் விரும்பும் அத்தனையையும் அறிவது பின்னர்
புலநுகர் பொருட்கள் அனைத்தும் இல்லாமல் ஆவது,
பற்றற்று இருப்பது எதனிலும், ஆயினும் யாவற்றையும்
காப்பது, தாங்குவது,
பண்பாடற்ற எதிலும் பண்பினை காண்பது -
பரமனின் செயல் தான் யாவையுமே, அறிக!
உள்ளும் புறமும் உள்ளார், உயிரனைத்திலும்,
உலகின் அசையும் அசையா யாவற்றிலும் இருப்பார்!
உணர, அறிய இயலாத அப்பரமன் அருகிலும் உள்ளார்,
தொலைவிலும் உள்ளார்!

பிளவற்ற விண்ணைப் போல் எங்கும் சீரோடு
நிறைந்திருந்த போதிலும்
பிளவுண்டு இருப்பதை போற் உலகில் ஒரு தோற்றம்
காட்டுவது,
அரியவனின் உருவாகவே உயிரனைத்தையும்
பேணிக் காப்பது,
உருத்திரனாய் அழிப்பது, பிரமனாய் படைப்பது
யாவுமே பரமனின் செயல்!

ஒளியினும் ஒளியாக, மாயை வலையினிற் சிக்காத
உளத்தினால் அறியப்பட வேண்டிய பரப்பிரம்மம்
ஊன்றிய தத்துவ அறிவினால் அறியப்படுகிறது!
யாவரின் இதயத்திலும் சிறப்புற அமைகிறது அது!

உடலின் விளக்கமும், ஞானமும் அறிந்து தெளிய
பரமாத்ம உருவமும் விளக்கப்பட்டன, சுருக்கமாய்!
யாவற்றையும் அறிகிறான் தத்துவமாய் என் பக்தன்!
அறிந்த பின் எனையே அடைகிறான்!

தொடக்கமேயற்றவை ப்ரக்ருதியும் புருஷனும்!
தீராத ஆசை, வெறுப்பு, முக்குணங்கள்
மாறாத அதன் விகாரங்கள் யாவையுமே
பிறந்தது ப்ரக்ருதியில் தான், அறிவாயே!

உறுப்புகள், செயலனைத்தும் ஏற்பட காரணம்
ப்ரக்ருதியே!
காரணமே ஜீவான்மா, இன்ப துன்ப நுகர்ச்சிற்கு!

முக்குண பயன் பெறுகிறான் புருஷன் ப்ரக்ருதியினின்று!
பல பிறவியில் தவிக்கிறது, ஜீவான்மா!

புருஷன் எனும் ஜீவன்மா பரமாத்மாவே தான்!
சாட்சியாக இருப்பதால் 'உபத்ருஷ்டா' என்றும்
உண்மை ஒளிர்வதால் 'அநுமந்தா' என்றும்
யாவரையும் தாங்கி காப்பதால் 'பர்த்தா' என்றும்
உயிருருவாய் இருந்து நுகர்வதால் 'போக்தா' என்றும்
அயன் முதலோர்க்கு தலைவராய் 'மஹேசன்' என்றும்,
சுத்த சத் சித் ஆனந்தமானதால்
'
பரமாத்மா' வென்றும் போற்றப்படுகிறார்!

ஆன்மனையும் குணங்கூடும் ப்ரக்ருதியையும்
எவன் தத்துவ நிலையிற் அறிவானோ,
அவன் விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றி வந்தாலும்
அவனுக்கு இல்லை பிறப்பு மறுபடியும்!
தூய்மையுடன் நுண்ணிய மதியினால் பரமனை
காண்பர் சிலர்!
தியாகத்தினாலும் காண்பதுண்டு பரமனை பலர்!
திறன்மிகு யோகியர் ஞானயோகம்; கர்மயோகம் மூலம்
பரமனைக் கண்டு, அவனையே அடைவர்!

இவ்விவரமறியா சிறுமதியோர்
தத்துவமறிந்த மேலோரிடம் கேட்டு உபாசனை ஏற்கின்றார்!
அதையே ஆதாரமாய் ஏற்று ஐயமின்றி
கடக்கின்றார் சம்சாரக் கடலை!

உடல் ஆன்மன் சேர்க்கையில் தான் -
அசையும், அசையாத, அனைத்து
உலகினமனைத்தும் உண்டாகின்றன!

அழியும் இவ்வுலகில் அழியாதிருக்கும் பரமனை
பார்ப்பார் எதிலும், சம புதியுடையோர்!
அவரே உண்மையில் இறைவனை காண்பவராகிறார்!

அனைத்திலும் சமநிலை பெற்று,
அன்போடு சமநோக்குடன் எதையும் பார்த்து,
தன்னாலேயே தன்னை அழித்துக் கொள்ளாதவனே
தன்னாலே பரகதியுற்றிடுவார்!

செயலனைத்தும் எந்நிலையிலும் செயற்படுவது
ப்ரக்ருதியினால் தான் என்றும்
ஆன்மா எதற்கும் கர்த்தா அல்லவென்றும் அறிந்தவன் தான்
உண்மையை பார்த்தவனாகிறான்!

அசையும், அசையா நிலைகள் தனித் தன்மையுடன்
நிலை பெற்றிருப்பது பரமனிடம் மட்டுமே!
சராசரமனைத்தும் விரிவடைவது பரமனிடமிருந்து தான்!
எப்போது மானிடன் இதை அறிவானோ
அப்போதே அடைகிறான் சச்சிதானந்த பரமனை!

அநாதியும் நிச்சலமான பரமன்
அழிவற்றவன் என்றும்!
எந்தெந்த உடலில் இருப்பினும்
செயலேதுமில்லை, ஒட்டுதலும் இல்லை அவனுக்கு!

எங்கும் நிறைந்த நுண்ணிய விண்வெளி
எதிலும் ஒட்டாது இருப்பது போல்
எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மா
ஒட்டுவதில்லை, உடல் குணங்களில்!

அர்ஜுனா!

பகலவன் அனைத்துலகிற்கும் எவ்வாறு
ஒளி படைக்கின்றானோ
அவ்வாறே ஒளிரச் செய்கிறான் உடலனைத்தையும்
ஆன்மன்!

யாக்கை ஆன்மன் வேறுபாடு உணர்ந்து,
ப்ரக்ருதியின் செயலினின்றும் விடுபடுவதை
எவர் அருட் கண்களால் அறிவாரோ,
அவரே அடைகிறார் பரமபதத்தை!

13-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
………………………………………………………………………………..

14-ம் அத்தியாயம்-   குணத்ரய விபாக யோகம்

ஸ்ரீ பகவான் உரைத்தார் -

பரம்பொருளை சிந்தித்து, ஸம்ஸார விடுதலைக்கு
ஞானம் எதுவோ அதையும்,
பரம்பொருளை அடைந்த பெரியோர் அறிந்த
ஞானம் எதுவோ அதையும் மீண்டும் சொல்வேன்!

படைப்பின் துவக்கத்தில் மீண்டும் பிறந்து
கடைசியில் ஊழிக்காலத்தில் அழிவதில்லை
மெய்யறிவு கொண்டு எனை அடைந்தோர்!

அர்ஜுனா! என்னால் உண்டான மூலப்ரக்குருதியில் 
அசையும் உயிரினங்களின் கருவை வைக்கிறேன்!
அதனாலன்றோ ஏற்படுகின்றன அனைத்துச் சராசரங்களும்!

அர்ஜுனா! யோனிகள் பலவற்றுள் 
பலவாறு பிறக்கும் உயிரினங்கள் யாவைக்கும்
ப்ரக்ருதியே தாய்! நான் விதையூட்டும் தந்தை!

அர்ஜுனா, அழிவற்ற ஜீவான்மாவை இணைக்கிறேன்
பிரக்ருதியின் முக்குணங்களான ஸத், ரஜஸ், தமஸில்!

குறையற்றவனே! முக்குணங்களில் 'ஸத்வம்'
ஒளியூட்டும் சுத்தத் தன்மையது!
இன்ப, ஞான தொடர்பினால் ஜீவான்மாவை கட்டுகிறது!

அர்ஜுனா! ஆசை, பற்றில் உண்டாவது 'ரஜோ; குணம்!
தன் தொடர்பான செயலிலும், செயற் பயனிலும்
கட்டுகிறது ஜீவான்மாவை!

அர்ஜுனா! யாவரையும் மயக்கும் உடற் பற்றுடைய
'
தமொ' குணம் அஞ்ஞானத்தில் உருவாகிறது!
வீண் செயல், சோம்பல், உறக்கம் இவைகளால்
ஜீவான்மாவை கட்டுகிறது!

சுகம் உண்டு ஸத்வ குணத்தில், அர்ஜுனா!
செயலில் ஈடுபடுவதோ 'ரஜோ' குணம்! வீண்
செயலில் துன்புறுத்தும் 'தமொ' குணம்!

ஒரு முறை 'ரஜோ', 'தமொ'வை அடக்கி 'ஸத்வம்' 
மேலோங்கும்!
பின் ஒரு முறை 'ஸத்', 'தமொ'வை அடக்கி 'ரஜோ'
மேலோங்கும்!
மற்றொரு முறை 'ஸத்', 'ரஜஸ்' இரண்டையும் அடக்கி
'
தமொ' மேலோங்கும்!

விவேகம், சைதன்ய ஒளி எப்போது
உடலிலும் உள்ளத்திலும் ஒளிருமோ, அப்போது தான்
ஸ்தவகுணம் மேலோங்கியுள்ளது என அறிக!

பேராசை, உலகியற் செயல்களிற் ஈடுபாடு
பலன் கருதும் செயல், தன்னலம், அமைதியின்மை
நுகர் பொருளில் ஆர்வம் இவை யாவும் உண்டாகும்
'
ரஜோ' குணம் மேலோங்கும் போது!

உள்ளும் புறமும் ஒளியின்மை, கடமைகளில்
ஈடுபாடின்றி அசட்டை, வீண் செயல் விருப்பம்
தூக்கம், மயக்கம் இவை உண்டாகும் 'தமோ' குணம்
மேலிடும்போது!

ஸத்வ குணம் மேலோங்கி இருக்க இறந்துபட்டால்
சிறப்புற செயலாற்றுவோர் பெறும் மேலான
சுவர்க்கப்பத புண்ணிய உலகு வாசம் கிடைக்கும்!

ரஜோ குணம் மேலிட இறந்துபட்டால்
செயற்பயனில் பற்றுடையோரிடையில் பிறப்பர்!

தமோ குணத்தின் உச்சத்தில் இறந்தால்
புழுவாய், பூச்சியாய், விலங்காய் அறிவற்ற
பிறப்பில் தோன்றுவர்!

சிறந்த செயற்பயன், அமைதியடைதல்,
தூய்மையான சுகம், ஞானம், உறுதியான மனம் -
இவையனைத்தும் கொண்டது 'ஸத்வம்'!
'
ராஜஸ'மான செயல் துயருடையது!
'
தமோ' குணச் செயல் அறியாமை!

ஞானம் பிறப்பது 'ஸத்'வத்தில்!
நாணும் பேராசை தோன்றுவது 'ரஜ'ஸில்!
'
தமஸில்' பிறக்கும் கவனமின்மை, மதிமயக்கம்
மற்றும் அறியாமை!

வீடு பேறு, உயர்ந்தோர் உலகு அடைவர் 
ஸத்வ குணத்தினர்!
மனித உலகிலேயே இடையில் நிலைபெறுவர் 
ரஜோ குணத்தினர்!
புழுவாய், விலங்காய், பறவையாய் பிறப்பர்
தாழ்ந்த குணமான தாமஸத்தில்!

முக்குணம் தவிர வேறெதையும் 'கர்த்தா' என்று
பரமனிடம் ஒன்றியவன்
அக்குணங்குளுக்கப்பாற் நிலவும் எனை
தத்துவ ரீதியாய் அறியும்போது எனை அடைகிறான்!

உடல் தோன்ற காரணமான முக்குணம் கடந்து
பிறபிறப்பு, மூப்பு, மற்றும் அனைத்து துன்பங்களினின்றும்
விடுபட்டு
பரமபதத்தையடைவர், நற்குண சான்றோர்!

அர்ஜுனன் கேட்டார் -
முக்குணம் கடந்தோரின் இலக்கணம் என்ன?
அவரின் நடத்தை என்ன?
எவ்வழியிற் இம்மூன்று குணங்களையும் கடக்கின்றார்?

ஸ்ரீ பகவான் உரைத்தார் -

அர்ஜுனா! ஸத்வகுணம் பிரகாசம், ரஜோ குண
செயற்தன்மை, தமொ குண மோஹம் -
இவை வரும்போது வெறுக்காமல், விலகும் போது
அதை மீண்டும் பெற விரும்பாதவன் எவனோ,

குணங்களால் அசைக்கப்படாமல் வெறும் சாட்சியாய் இருந்து
குணங்கள் அவைகளினாலேயே இயங்குகின்றன என அறிந்து
சச்சிதானந்த பரமனிடம் ஒன்றியிருப்பான் எவனோ,
அந்நிலையினின்றும் நிலை குலையாதிருப்பவன் எவனோ,

ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைகுலையாது நின்று
இன்ப துன்பங்களை சமமாக பாவித்து
மண்ணும், கல்லும், பொன்னும் யாவையும் சமமென பாவித்து
ஞானியாக வேண்டியவை, வேண்டாதவையில் ஒன்றாக நிறைந்து
இகழ்ச்சி, புகழ்ச்சியில் தடுமாறாமலும் மகிழாமலும்
இருப்பவன் எவனோ,

பெருமைக்கும், சிறுமைக்கும் சம நோக்குடையான்
பகையிலும் நட்பிலும் ஓர் நிலையுடையோன்
எதையும் தான் செய்தேன், தான் தான் கர்த்த என
கூறாதவன் எவனோ
முக்குணம் கடந்தவன், அறிந்திடுவாய்!

வேறெதிலும் நாட்டமின்றி, பக்தியில் எனையே வழிபடுவோர்
முற்றிலும் முக்குணம் கடந்து பரமனை அடைய தகுதி பெறுவார்!

ஏனெனில் அழிவற்ற பரப்பிரம்மம்,
இறவா நிலை, நிலையான அறம்
சீரான மகிழ்ச்சி, யாவற்றிலும் 
நிறைந்திருப்பவன் நானே! அறிக!

14-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
.................................................................................

15-ம் அத்தியாயம் -  புருஷோத்தம யோகம்

ஸ்ரீ பகவான் கூறினார் -

அரச மரத்தின் வேர் ஆதி பரமேஸ்வரன்!
அம்மரத்தின் நடு பாகமே, ப்ரம்ம தேவன்!
இலைகள் வேதங்கள்!
வாழ்வியலான அந்த அரச மரத்தின் வேர்களுடன், மரத்தை
அறியும் தத்துவாசிரியர்களே, வேதம் முழுமையாய் அறிந்தவர்!

ஸம்ஸாரமாகிய அரச மரத்தில் கிளைகள் வளர்வது
முக்குண நீரினால்!
தளிர்கள் கூடுவது புலன் நுகர் பொருளாம்! அவை
மேலும், கீழும் எங்கும் பரவி மனித, விலங்கு பிறவிகளில்
நிற்கின்றது
இதே போன்று மனிதனும் தன் செயலுக்கேற்ப 
அகந்தை, மமதை, வாசனை உருவங்களாய் -
மரத்தின் வேர்களாக மேலும் கீழும் எவ்வுலகிலும்
தோன்றுகின்றான்!

ஸம்ஸார உருவான மரத்தின் உருவம்
சொல்லப்படுவது போல் ஸம்ஸாரத்தில் புலப்படுவதில்லை!
ஆதியும் அந்தமும் இல்லாதது இது!
கருவம், மமதை, முன்வினைப் பயன் என்ற ஸம்ஸார வேர்களை
உறுதிகொண்டு, வைராக்யம் என்ற கோடரியால் வெட்டி
எறிந்து விடு!

பிறகு, எங்கே சென்று மீண்டும் திரும்பாத பரமபத
உருவான பரமனை நன்கு தேடி அடைய வேண்டும்!
தொன்மையான ஸம்ஸார விருக்ஷத்தின் ஆரம்பம்
எங்கிருந்து தொடருமோ, அந்த ஆதி நாராயணனை

சரணடைந்து விட்டால் வாழ்வியல் விருக்ஷத்தில் உழல
வேண்டாமே யென்ற
உறுதியோடு சிந்தித்து தியானிக்க வேண்டும்!
தற்பெருமை, ஆசையினின்றும் விடுபட்டோர்,
பற்றற்று பரமனவன் உருவில் என்றும் நிலைத்திருப்பார்!
இன்ப துன்பங்களினின்றும் விடுபட்ட ஆத்ம ஞானியரும்
அழிவிலா பேரின்ப பரமனின் சேவடி சேருவர்!

திரும்புவதில்லை யென்றும் ஸம்ஸார சிக்கலுக்கு
பரமபதமடைந்தோர்!
தன்னாலேயே ஒளிபெறும் பரமபதத்திற்கு சூரிய ஒளி இல்லை!
சந்திர ஒளியும் இல்லை!
அக்னி தேவனும் அதை ஒளிர்ப்பதில்லை!
எனது மேலான ஸ்தானம் தான் பரமபதம் - அறிவாய்!
உடலில் நிலைத்துள்ள ஜீவாத்மா என் அம்சம் அறிவாய்!
பிரக்ருதியின் மனம், புலன்களை அது ஈர்க்கின்றது!

மனம் நிறைந்த இடத்தினின்று வீசும் காற்று
மணத்தை எடுத்துச் செல்வது போல்,
உடலை ஆளும் ஜீவான்மா எவ்வுடலினின்று கிளம்புகிறதோ,
அதனின் மனம், புலன்களை போய்ச் சேரும்
உடலுக்கு எடுத்துச் செல்கிறது!
செவி, கண், தோல், நாக்கு, மூக்கு, மனம் இவற்றை
சார்ந்து புலநுகர் பொருட்களை அனுபவிக்கின்றது ஜீவான்மா!

உடலை விடும் போதோ, உடலில் இருக்கும் போதோ
உயர்வான சுகம் அமையும் போதோ, முக்குணங்களும்
கூடியிருக்கும் போதோ!
அறிவதில்லை ஜீவான்மாவை அறிவிலிகள்!
ஞானக்கண் பெற்ற ஞானியர் தான் அறிகின்றனர்
இதை, நன்கு!

இதயம் உறைந்த அன்பிலே முயன்று வணங்குகின்றனர் 
யோகியர்!
உள்ளத் தூய்மையின்றி எப்படி முயன்றும்
அறிய இயலாது ஆன்மாவை, அஞ்ஞானிகளால்!

உலகமனைத்தையும் ஒளிரச் செய்யும் சூரிய ஒளியும்
சந்திரன், நெருப்பு இவைகளின் ஒளியும் -
என்னுடைய ஒளியே யென்று அறிந்து கொள்!

பூமிக்குள் நுழைந்து உயிரினமனத்தையும் தாங்குகின்றேன்!
அமுதம் நிறை நிலவாகி அனைத்து பயிர், பச்சை
மரங்களையும் காக்கின்றேன்!

அனைத்து உயிரினங்களின் உடலில் நுழைந்து 
பிராண, அபான வாயுடன் கூடி
'
வைஸ்வாநரன்' எனும் அக்னியாகி
நான்கு வித உணவுகளையும் ஜீரணிக்கின்றேன்!

அனைத்து உயிரினங்களின் இதயத்திலும்
ஆழ்நிலையில் இருந்து நினைவு, அறிவு, தெளிவு
அளிக்கின்றேன்!

வேதங்களாற் அறியத்தக்க நான்
வேதாந்தத்தை செய்தவன்!
மறைகளின் உட்பொருளை அறிந்தவன்!

அழிபவை, அழியாதவையென இரண்டு வகையில்
அழியக்கூடியவை உயிரினங்களின் உடலனைத்தும்!
உடலில் உறையும் ஜீவான்மா அழிவதில்லை யென்றுமே!

மூவுலகிலும் புகுந்து யாவரையும் 
தாங்கிக் காக்கும் அழிவற்ற பரமன்
இந்த அழிந்து அழியாதவர்களிடமிருந்து
வேறுபட்டவன்!

அழியும் பொருளுக்கு அப்பாற்பட்டு
அழியா ஜீவான்மாவிற்கு மேலோனாகியுள்ள நான்
அகிலத்தினாலும், மறைகளினாலும் 'புருஷோத்தமன்'
என அழைக்கப்படுகிறேன்!

பரத! எனை புருஷோத்தமன் என தத்துவரீதியாக 
அறியும், யாவற்றையும் அறிந்த அந்த ஞானி
எல்லாவிதமாகவும், எஞ்ஞான்றும் வழிபடுகிறான்,
எனையே!

பாவமற்ற அர்ஜுனா! மேற்சொன்னவை யாவும்
மிகவும் ரசியமாகப் போற்றத்தக்கது!
அறிவுபூர்வமாக இதை அறிபவன் ஞானியும்,
செய்ய வேண்டியதை செய்தவனும் ஆகிறான்!

15-
ம் அத்தியாயம் நிறைவுற்றது.
…………………………………………………………………………………….-



No comments:

Post a Comment