Tuesday 31 December 2013

கவிதையில் கீதை - வசன காவியம் - First Chapter to 9th Chapter


ஸ்ரீகுருப்யோ நம:
கவிதையில் கீதை   வசன காவியம்
ஆக்கியோன் : (மு.கிருஷ்ண மூர்த்தி ) இடைமருதன்

கற்பக களிரே நின் மலர்பதம் போற்றி
சொற் செல்வம் ஈந்து சோர்வின்றி யான்
கற்று, தெளிந்து கண்ணனின் கீதையை அறிந்து
பற்றுடன் உனை நினைத்து 'கவிவசனம்' எழுத அருள்வீரே!

குருவருள் துணை செய்தல் வேண்டும்!
குருவும் திருவும் நெஞ்சில் பொருந்தியிருக்க வேண்டும்!
கன்னி முயற்சி இதுவே யெனை ஆதரிக்க வேண்டும்
கண்ணனின் கருணை குரு வடிவில் வேண்டும்!

முதல் அத்தியாயம்

திருதராஷ்டிரன் சொன்னார் -

தருமத்தின் தலைநகரம் குருத்தலத்தில்
அருமைந்தர் ஒரு நூறு, உறு துணை
குறுநில மன்னரொடு
வரும் போரினை எதிர் நோக்கும் பாண்டு தன்
தோன்றல்களும்
பெருங்கூட்டம் செய்தது என்ன?
கூறுவீர் ஸஞ்சயரே!

ஸஞ்சயன் சொன்னார் -

எதிரணி படையினை பார்த்த மன்னன் துரியோதனன் 
மதி நுட்ப குரு துரோணரை அணுகி பேசலுற்றான்!

ஆசிரிய பெருந்தகையே!
பாருங்கள் எதிரணியை!
ஆற்றல் மிகு துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்
போர்த்திறனில் பாண்டவர் படையை
அணிவகுத்த அழகையே!
எத்துனைப் பெரிய சேனை, என்ன ஒரு அமைப்பு
அத்தனையும் கூர்ந்து நோக்கிடுவீர் பெரியோரே!

பாண்டவ படையினில் வீரமிகு வில்லாளிகள்
பாங்குடன் பரவலாய் நிற்பதையே காணீரே!
வீமனுக்கும் பார்த்தனுக்கும் ஈடான வீரர்கள்
விராடன், ஸாத்யகி, மன்னன் திருபதனும்
வீரமிகு திருஷ்ட கேதுவுடன் கேசி ராஸனும்
பெருவலியர் காசி மன்னன், புருஜித், குந்தி போஜனும்
சீர்மிகு மாந்தர் ஸைப்யன், யுதா மன்யு உத்தமைஜாவும்
அருச்சனன் சுபத்திரை அருமைந்தன் அபிமன்யு 
திரெளபதி புத்திரர் ஐவருமே சேர்ந்த 
பெரும் பெரும் வீரர் கூட்டத்தை பார்த்திடுவீர்!

அந்தணரில் அருஞ்சீலரே கேளுங்கள் - சொல்கின்றேன்!
அணிவகுக்கும் ஆற்றல் மிகு தலைவரும் நம்மிடம் உண்டு;
அவர் குறித்து சொல்லிடுவேன் விரிவாக!
அதையறிந்து படை வலிமை எடை போட்டு பார்ப்பீரே!
படைத் தலைமை யேற்றவரே! நம்மிடம் இருப்பவரில் 
பாட்டனார் பீஷ்மர், நல் நண்பர் கர்ணன்,
போர் வெற்றிச் செம்மல்கள் கிருபரோடு, அஸ்வத்தாமனும்
பெரும் வீரர் விகர்ணனும், சோம தத்தர் மகன்
பூரிச்ரவஸும் ஆவர்!
படைக் கலன்கள் பல கொண்டு காத்திருக்கும்
வீராதி வீரர்களே
பணயமாக தம்முயிரை எனக்காக வைத்த

போர்த் திறன் வாய்த்தவரே!
பெரிய பாட்டன் பீஷ்மரின் படையினை 
வெல்லவும் முடியுமா?
பருத்த உடல் பாண்டவ வீமனின் சேனையினை
வெல்லத் தான் முடியாதா?

தத்தம் இடம் நின்று போர் முனையில் அவரவர்கள்
உத்தம பீஷ்மரை நாற்புறமும் காத்திடுவீர்!
என மன்னன் புகர்ந்தான்!

ஸஞ்சயன் தொடர்ந்தார் -

கெளரவ முதியோன் பீஷ்மன் உடனே
கர்ஜனை புரிந்தார் சிங்கக் குரலிலே -
சங்கினை ஊதி பெருமுழக்கம் செய்தார் -
துரியோதனன் மனம் மகிழ!

மறையோன் பாட்டனின் சங்கொலி தொடர்ந்து - நாற்புறமும்
பறை, பேரி, தம்பட்ட முழக்கத்திற்
சங்கங்கள் ஆர்ப்பரிக்க
உறைந்த மனங்களில் பரந்து நின்றது பயங்கரம்!
நிறைந்து விண்ணிலே எதிரொளியும் செய்ததே!

குந்தி மகன் தருமன் ஊதினான் அனந்த விஜய
சங்கினையே!
இந்த நேரம் மணி புஷ்பகமும் முழங்கியது
நகுல சகாதேவரால்!
'
பாஞ்ச ஜந்ய; சங்கை முழங்கினான் கண்ணன்!
அச்சம் தரும் 'தேவநத்தம்' முழங்கியது
தனஞ்செயனால்!
பெரிய தொரு பயம் சொரியும் 'பெளண்ட்ரம்' எனும்
சங்கினையே
போர்க்களம் நடுங்க ஆர்ப்பரித்தான்
பீமசேனன்!

வில் வித்தகன் காசி மன்னன், சீர்வல்லான் சிகண்டி
வல்லோர்கள் திருஷ்டத்யுமனனுடன் விராட மன்னனும்
-
என்றும்
வீழ்ச்சியே காணாத ஸாத்யகி, திருபத மன்னன் -
பாஞ்சாலி தம்
வீரப் புதல்வர் ஐவரும் நெடுந்தோள் சுபத்திரை மகன்
அபிமன்யுவும்
ஆர்ப்பரித்த சங்கொலியும் நாற்புறமும்
போர் முனையில் சூழ்ந்ததுவே!

ஒரே நேரம் யாவரும் ஒலித்த போர்முழக்க சங்கொலி
பார் முதல் விண் வரை எதிரொலி செய்ததுவே!
மன்னர்பிரானே! உன் மக்கள் இதயங்கள் 
பன்மடங்கு பாதித்து பிளவுறச் செய்ததுவே! கேளீரே!

அனுமன் கொடியுடை பார்த்தன் பார்த்தனன்
அமர் புரிய காத்திருந்த கெளரவப் படையினையே!
ஆயுதம் துறக்க எண்ணி வில்லினை
நிமிர்த்தி விட்ட விஜயன்
அச்சுதனை வேண்டி நின்றான்
இரு படை இடையினில் தேர் நிறுத்த!

போர் முனையில் எதிர்புற சேனையினை நன்கு 
பார்க்குமிடத்தில் தேரினை நிறுத்து, கண்ணா!
யார் யாரிடம் போரிட வேண்டுமோ அவரை
கூர்ந்து நோக்கி அறிய வேண்டி, அத்தனை நேரம்
பார்த்து தேரினை நிறுத்தி வைப்பாய், கண்ணா!

பழி பாவம் அஞ்சா தீயவன் துரியோதனன் பக்கம்
பக்கபலமாய் வந்தோரை எவரென்று காண்கிறேன், கண்ணா!

ஸஞ்சயன் தொடர்ந்தான் -

பார்த்தனவன் கேட்ட படி பாட்டன், துரோணர் சூழ
படை முன்பு
பகவான் கண்ணன் தேரை நிலை நிறுத்தி பார்க்கச் 
சொன்னார்!
நடு நிலையிற் தேர் மீதிருந்து நெடுந்தூரம்
இரு பக்கமும் பார்த்தான்!
அடுத்தடுத்து இரு படையில் நிற்கின்ற
உறவு முறைகள்
பெரிய சிறிய தந்தைகள், பாட்டனார், முப்பாட்டனார்கள்
பெரிய பெரிய குருமார்கள், அருமை அம்மான்கள்
பரிவான உடன் பிறந்தோர், பாசப்புத்திரர்கள்
பேரன்கள், நேசமிகு நண்பர்கள்,
மதிப்பிற்குரிய மாமனார்கள்,
ஆசையாய் போர்புரிய வந்த நலமிக்க தொண்டர்கள்
ஆராத் துயரத்துடன் அனைவரையும்
அகம் நொந்து பார்த்தான், பார்த்தனே!

இரக்கமிகு கனத்த நெஞ்சுடன் பரந்து நின்ற
இரு பக்க உறவுகளைக் கண்டு
வருத்த முற்று பேசலுற்றான்

அருச்சுனன் சொன்னான் -
கண்ணா! போர் தொடுக்க கூடியிருக்கும் உறவுகளை
கண்டு நான் கலங்குகின்றேன்!
சோர்வுற்றன அங்கங்கள்!
வாய் உலர, மெய் சிலிர்க்க உடல் நடுக்கம்
கொண்டு விட்டேன்!
உயிர் நிலைகளில் உச்ச நிலை வேதனை
அடைகின்றேன்!
காண்டீபம் கை நழுவ, சுடுங்காந்தல் மெய் சூழ
கலக்கமும் குழப்பமும் மனம் சேர
நிற்கவும் இயலாது தவிக்கின்றேன்!

கேடான நிமித்தங்கள் பல காண்கின்றேன்!

கொடும் போர் செய்து உறவினம் மாள
காணும் மேன்மை தான் என்ன?

கண்ணா!

வெற்றியும் வேண்டேன்! பேரரசும் வேண்டேன்!
சுற்றி வரும் சுகங்களும் வேண்டேன், கோவித்தா!
பெற்ற சுகமும், பேரரசும் பயக்கும் பயன் தான், என்ன?
பெற்று விடும் இச் சுகத்தோடு வாழ்வதும் ஒரு வாழ்வா?
சோர விட்ட செல்வத்தையும் இழந்துவிட்ட அரசினையும்
சேர்ந்திங்கே மீட்டுவிட - யாருக்காக போர் புரிய
வந்தேனோ - இந்த
வீர சோதரரோ உயிர் பற்றற்று அத்தனையும் துறந்து 
வீர மரணம் எய்த வந்தனரே, போர்க்களமே!
போரிட்டு மீட்ட அரசும் அளவிலா செல்வமும்
யாருக்கு பயன்படும் யாவரும் மாண்ட பின்னே?
குருமார்கள், பெரிய சிறிய தந்தைகள்,
பெரும் பாட்டனார்கள், புத்திரச் செல்வங்கள்
அம்மான்கள், மாமனார்கள், பேரன்கள்
அருமை மைத்துனர்கள், சேர்ந்த நல் உறவினர்கள்
அமர் புரிய வந்தனரே, வாடுகின்றேன் கண்ணா!

மூவுலகு பேரரசு கிடைத்தாலும் கூட 
யாரவரையும் கொல்ல போர் புரியேன்!
                                                            -
அஃதிருக்க
பூவுலகு அரசுக்கு நான்'
போரிடுவேனா, கண்ணா?
திருதராட்டிர மக்களை வதைப்பதில்
மன மகிழ்ச்சி தான் என்ன?
கிறுக்குப் படுபாவிகள் படு கொலையினாற்
மிஞ்சுவது பாபமன்றோ?

உறவு முறை சேர்தாரை -
இறக்கச் செய்ய நாமென்ன தகுந்தவரா?

சரியற்ற செய்கையிது, கண்ணா!
உறவுகள் மாள பெருஞ்சுகந்தான் உண்டோ?
பேராசையினால் மதியிழந்து நம்பிக்கை துரோகம் செய்து
பேரரக்க போர்தனில் யாவருமே மடிவதை 
பாவமென அறியாத பாவிகள்!
கோரமான குல நாசப் போரின் குற்றமறிந்த நாமும்
நேராக நேர்மையான ஆலோசனை
செய்யாத தேன் கண்ணா?

தொடர்ந்து வரும் தொன்மை மிகு குல தர்மமும்
தொடரும் போர் தனில் குல நாசமும் வந்திடுமே!
அறம் அழிந்து பட்டால் குலப் பெண்டிற் குணமும் 
அழியாதா?
பெரும் பெண்டிற் குணச் சரிவால் 
குலக் கலப்பு வாராதா?
குலக் கலப்பால் குலமும் மக்களும் நரகம் வீழ்வாரே!
காலங்களில் செயும் நீத்தார் கடன் அழிந்து
நீத்தாரும் வாடுவரே!
குலக் கலப்பட இன அழிவு தீச் செயலாற்
பலங்குன்றி குல தர்மம் கலைந்து
கீழ்பட்டு வீழ்ந்திடுமே!
காலமெல்லாம் மக்களை நரகச் சேற்றில் தள்ளிடுமே!
சீர் மிகு குல தர்மம் சீர்கெட்டு போவதனால், அறியாயோ?
மேலறிவு பெற்றிருந்தும் வீணே அரசு சுகம் வேண்டி
மேலான உறவுகளை கொன்று விடும்
பாவத்தை செய்யத்தான் நின்றோமே!
போர்க்களம் ஏதுமின்றி போரிடாமல் நிற்கும் எனை
பார்த்திபன் திருதராட்டிரன் மக்கள் மாய்த்தாலும்
பெரு நன்மை பெறுவேனே!
மனம் வருந்தி களைத்த விஜயன் பலவாறு பேசிய பின்
கனத்த நெஞ்சோடு அம்பு, வில் துறந்து
தேர் தட்டில் சாய்ந்தானே!

முதல் அத்தியாயம் 'அர்ஜுன விவாத யோகம்'  நிறைவுற்றது
…………………………………………………………………………………………………………
'
ஸாங்க்ய யோகம்' என்ற இரண்டாம் அத்யாயம்

ஸஞ்சயன் கூறினார் -

நீர் நிறைந்த கண்களோடு
நிலை தளர்ந்த பார்த்தனிடம்
பேசலுற்றான் கண்ணபிரான்!
                                                -
சொல்வேனே!

பகவான் உரைத்தார் -
நேரம் காலமறியாது வந்ததேனோ
இந்த பரிவு மோகம்!
நீயறிய வேண்டும் பார்த்தா! சான்றோரும் விரும்பார் இதை!
மேலுலகும் கிட்டாது, பெரும் புகழும் தராது;
அஃதிருக்க
மெய், மன இறுக்கம் கூடாத ஒன்றன்றோ?

எதிரிகளை வென்று வாட்டுபவனே!
ஏன் உனக்கு பொருந்தாத அலித் தன்மை?
நலிந்த உந்தன் தளர்ச்சியை விடுத்து
நிறைந்த மனதுடன் போரிட நிமிர்ந்து, நில்!

அர்ச்சுனன் சொன்னார் -

எவ்விதம் இயலும் கண்ணா, எனக்கு? கொடும்
அம்புகள் எய்தி அரும் பாட்டனையும்
ஆசார்ய துரோணரையும்
அமர் செய்து வீழ்த்துவது?
அருச்சிக்கத்தக்க பெரியோர் அன்றோ?

பிச்சைப் புகுந்து பசியாற்றலும் நன்றே,
பேரரழிவுப் போரினில் ஆசிரியக் கொலையினை விட!
குருக் கொலைகள் செய்து பெறுவதோ
குருதி சார்ந்த செல்வங்கள்?
பெருஞ் சுகமனைத்தும் பயன் கருதிப் பெறுபவையே!

போரா விலகலா சிறந்தது எதுவென அறியேனே!
பேரழிவு நமக்கா, அவர்க்கா அதுவும் அறியேனே!
எவரைக் கொன்று நாம் வாழ விரும்பாத நிலையிற்
அவரே சாகத் துணிந்து நிற்கிறாரே, அமர் செய்ய!

அச்சமெனும் கோழைத் தனம் கொண்டு சீர் அழிந்தேன்!
அறம் பற்றிய தீர்வறிவின்றி குழம்பி நிற்கும் அடியேனுக்கு
உறுதி நிறை மேன்மை பெறும் சாதனை
எதுவென்று உணர்த்திடுவாய் கண்ணா!
உன்னரும் சீடனன்றோ, நான்! சரணடைந்தேன் 
சொல்லிடுவாய்!

உலகினில் எதிர்ப்பின்றி அமையும் அரசாணையினும் 
உயர் மேலுலகில் தேவர்க்கு தலைவனாய் இருப்பதிலும்
எது என் புலன் வாட்டும் சோகம் நீக்குமோ
அதை நான் காணவில்லை, சொல்வாயா கண்ணா?

ஸஞ்சயன் சொன்னார் -

பேரரசே! உறக்கம் துறந்த பார்த்தன்
பின்னர் கண்ணனிடம்
"
போர் வேண்டேன் கோவிந்தா! சமர் புரியேன்
என அறற்றி பின் பேசா நின்றான்!

பரத குல அரசே!
பரமன் கண்ணன் உரைத்தான் நகைத்தவாறு
படை நடுவில் படு துயரில் வீழ்ந்த பார்த்தனை
நோக்கி!

கண்ணன் பகர்ந்தார் -

பார்த்தனே, பாவிகள் பொருட்டு மனம் சோர்ந்தாய்!
பேரறிஞன் போற் பேசலுற்றாய், பலவாறு!
அறிந்து கொள் நண்பா!
அழிந்தோரையும் அழிவோரையும் எண்ணி சோர்வதில்லை,
அறிஞர்!

என்றும் நீயும் நானும் அரசர்களும் இருந்தோம் என்பது உறுதி!
அன்று நாம் இருந்ததில்லை என்பது என்றுமில்லை!
வரு நாளில் யாவரும் இருக்கப்போவதில்லை என்பதோ
ஒரு நாளும் இல்லை!
அறிவாய் அன்றும் இருந்தோம், என்றும் இருப்போம்!

உடலும் அழிய, அழிவதில்லை, ஆன்மா!
விடலைப் பருவம் இளமை, முதுமை
யாவையும் உடலுக்குத் தான்!
சடலமான பின் யாவையுமே நிழலுருவில் சேருமன்றி
ஜடமான ஆன்மாவில் அல்ல!
அழிந்து எழுதலில் ஆன்றோர் மனம் சோரார்!

தட்ப வெப்ப சுக துக்கம் பிறக்கும் புலனைத்தும்
கெட்டலைக்கும் இன்பத்தில் இணைந்து அழிவடையும்!
குந்தி மைந்தா, நிலையற்றதில் தடுமாறி
குன்றி விடாதே! பொறுமை காப்பாய்!

புலனோடு போகமும் சேர்ந்து கலக்கமுறச் செய்யாது
பெருஞ் சுகம், உறும் துன்பம் யாவையும்
சமநோக்கு உடையார் பால்!

இல்லாதவை என்றும் இல்லாததாகவே யில்லை!
இருக்கும் உண்மைகள் என்றும் இல்லாமல் இல்லை!
தத்துவமறிந்த ஞானிகள் கண்டறிந்த
இத்தனை இரட்டை தத்துவங்கள் அறிவாயே!

புலன் சார்ந்த ஜடப் பொருள் யாவும் 
நிலை நிற்கும் பரம் பொருள் தன்னை அழித்திட  இயலாது!
அழிவற்ற ஆன்மாவின் பரு உடல் யாவுமே  அழிந்து விடும்!
அறிந்து கொள் பரத குல தோன்றலே,
புறப்படு போர் புரிய!

ஆன்மாவை கொல்வேன் என்போரும், அதனால்
அனைத்தும் கொல்லப்படுமென் போரும் அறிவிலிகள்!
உண்மையில் ஆன்மா கொல்லப்படுவதில்லை!
என்றும் யாவரையும் ஆன்மா கொல்வதில்லை!

பிறப்பில்லை, இறப்புமில்லை ஆன்மாவிற்கு!
என்றோ உண்டாகி, பின்னிருப்பது வுமில்லை!
பிறப்பற்ற, நித்திய, நிர்மலமான பழமையானவன்!
ஒரு நாள் உடலும் அழியும்! அழியா நிற்கும்
ஆன்மா, இன்றும் என்றும்!

குந்தி மகனே,
அழிவற்ற நித்தியமான, பிறப்பற்ற மாறுதல் ஏதும் அற்ற
ஆன்மாவை அறிந்தவன் வருந்தான் உடலுக்காக
அதன் அழிவில்!

நைந்த உடை தனை களைந் தெறிந்து
நேர்த்தி மிகு வேறுடை அணிவது போல்
நலிந்து வீழ்ந்து பட்ட உடலினைப் பிரித்து
நூதன உடலை அடைகின்றார், ஜீவான்மா!

படைக் கலன்கள் அழிப்பதில்லை ஆன்மனை
பற்றி எரியும் தீயோ சுடுவதில்லை!
சுற்றியுள்ள தண்ணீரும் நனைப்பதில்லை!
காற்றும் அவனை உலர்த்துவதில்லை!

வெட்டுப்படான், எரிக்கப்படான், நனைக்கப்படான்
வெங்காற்றால் உலர்த்தப்படான் - என்றறிவாயே!
நித்தியன், நிறைந்தவன், இயக்கமற்றவன்
நீடூழி நிற்பவன், என்றும் இருப்பவன், அவனே ஆன்மன்!
அனைத்தையும் ஆழ்த்தறிந்த பின்னர்
உனை வாட்டும் வருத்தம் ஏனோ, அர்ஜுனா!

பிறப்பிறப்பு உண்டென்று ஆன்மாவை நினைத்தாலும்,
ஒரு நாளும் வருந்தத் தேவையில்லை! நீ அறிவாயே!
பிறப்பவன் இறந்து, இறப்பவன் பிறக்கும்
தொடர்கள்
உறுதியான பின்னர், வருத்தமுற யேதும் தேவைதான்
என்ன?

உயிரனைத்தும் பிறக்குமுன் தென்படுவதில்லை!
உயிரழிந்த பின்னும் தென்படா தாகிவிடும்!
இடையினில் மட்டும் தெரியும் நிலையிற் 
இடையறாது வருத்தமுறுவது ஏனோ, அர்ஜுனா!

பார்ப்பவன், பார்க்கப்படுபவன் பார்ப்பது என
இம்மூவகை செயலும்
பரந்து நிற்கும் ஆன்மாவை அறியாது!
மாமனிதர் யாரோ ஒருவர் பார்க்கிறார், ஆன்மாவை
அதிசயித்து!
பெரிய தொரு மகானால் தான் 
அறியப்படுகிறது ஆன்மா!
பாமரன் உலகியல் புலன்களால்
அறிய வொன்றாது ஆன்மாவை!

பார்த்தனே கேள்!
எவ்வுயிரிலும் விரிந்திருக்கும் ஆன்மா
அழிந்து படுவதில்லை!
அவ்வாறிருக்க அனைத்து உயிர்க்காகவும் வருந்துதல்
தக்கதன்று!

தன் குல தர்மம் கண்டு அஞ்சுதல் வேண்டாம்!
தடந்தோள் சத்திரியனுக்கு அணி செய்வது
போர் குணமே!
அமர்புரிதலற்று பிரிதொரு மேன்மை தரும்
அருங் கடமை ஏதுமில்லை பார்த்தா! அறிவாயே!

தானாக நிகழ்ந்து திறந்து கொண்ட மேலுலக 
வாயிலான
தோன்றா நிற்கும் போரிதனை
மேலுடை சத்திரியரே, அடைவர், பார்த்தா!
அறம் சார்ந்த போரினை தவிர்தால், அன்பா!
அழியா நின்ற புகழுடன், இன தருமமும் அழிந்திடுமே!

இகழ்ந்து பேசப்படுவாய் என்றும் பலரால்! அவ்விகழ்ச்சி
இறப்பதிலும் கொடுமையாம் சிறப்புடை மாந்தர்க்கு!
முன்னம் பெருமையுற்றவனாய் உனைக் கண்ட வல்லுனர்கள், இனி
சின்னத் தனமாய் தாழ்ந்தால், அச்சத்தால்
போர்த்துறந்தாய் என உனை எண்ணுவரே!

போர் துறந்து போவதென்றால், நிந்தித்து நின் திறமையை
பேசத் தகுதியற்ற சொற்களை வீசினால் எதிரிகள்
துயரம் வேறுண்டோ, இதனினும்!

மடிந்தாலும் மேலுலகம்! போரினில் வென்றாலும் அரசு சுகம்!
படிந்திடும் நலங்காண போரினில்
நின்றிடுவாய் உறுதியாக!
வெற்றி, தோல்வி, லாபம், நட்டம், இன்ப துன்பம் அனைத்தையும்
சமமாகக் கருது!
வீரப்போர் புரிய எழுந்திரு!
பாவங்கள் வாரா இதனால், அறிந்திடு!

ஞான யோகத்தில் அடையும் செயல்களின் சம நோக்கை
நேயமான கரும யோகத்திலும் கண்டு கருமத் தளைகளை
                                                            களைவாய்!
கரும யோகம் இடையிலே சிதைந்தாலும்   ஆதாரம் அழிவதில்லை!
பெரும் பயனாம் இந்த யோகம் சிறிதே பயின்றாலும் மரண பயம் தவிர்க்கும்!

சிதறாத உறுதி கொண்டான் புத்தி ஒன்று தான்      யோகத்திலுண்டு!
சித்தமெலாம் அலையும் பல நோக்குடை புத்தி,
பயனிற் பற்றுடைய முடிவற்ற ஒன்றாக உள்ளது!

அர்ஜுனா!

போக சுகமதில் மூழ்கி சுவர்கமே மேலானது என்று நினைப்பவர், 
வெறும் கர்ம பலன்களையும் அதனை பெறும் சாதனைகளையும்
புகழும் வேதச் சொற்களில் லயித்து,
வேறெதுவும் உலகில் இல்லையென பகர்வார்- அறிவிலிகள்!
கருமத்தினால் பெறும் போக சுகங்களுக்காக வேதம்
பகரும் கவர்ச்சி சொற்களில் மனம் லயிப்பவர் புத்தி
பன்னலம் பயக்கும் பரமனிடம் நிலைப்பதில்லை, அறிவாயே!

முக்குண செயலாம் போகத்தினையும் அதன்
பக்குவமான சாதனை முறைகளையும் கூறுவது வேதம்.
பற்றற்று அச்சாதனைகளை நாடாது -
பற்றும் மகிழ்ச்சியையும் துயரையும் பொருட்படுத்தாது
            இக பர சுகங்களை
விரும்பா நிலையிற் பரமாத்வாவை 
பெருநிலை பெற்று மனதை ஒரு நிலை படுத்துபவனாய்
            ஆவாயாக!
சுற்றி யெங்கும் நீர் நிலையிருக்க
சிறு நீர் தேக்க நிலையினை அடையும் பயன் போல
பர தத்துவம் அறிந்தோர்க்கு மறையினாலும்
            அளவான பயன் தான் கிடைக்கும்
பெரிய நீர் நிலையாம் பிரும்மத்தை அறிந்த பின்
சிறிய நீர் நிலை தத்துவம் பயனற்று போவது போற்
பெரிய தொரு ஆனந்த நிலை பெற்ற பின்
சிறியதொரு ஆனந்தம் பெற மறைகள் தேவையில்லை!

உன் கடன் பணி செய்வதே! பயன் கோரும் உரிமை உனக்கில்லை!
உன் செயலிற் பயன் காண விழையாதே!   கருமம் துறக்கவும் துடிக்காதே!

பற்றறுத்துவிடு! பயனில் நலமோ, நலமற்றதற்கோ
            சம நோக்கு வை!
பரந்த யோகம் சிறக்க செயலாற்று!
அறிந்து கொள், சம நோக்கே யோகமாம்!

சிறுமையாம் பயன் கருதும் செயல்!
சிறப்பாம், சம நோக்கு பெறுவதில் படிந்து விடு!
துறந்து விடு செயற் காணும் பயனையே!
சம நோக்குடையார் நல்ல, தீய கன்மங்களை
            விட்டு விடுவர் இவ்வுலத்திலேயே!
அவையினின்றும் விடுபடுவார் படிப்படியாக!
சமத்துவ யோகத்தில் நின்று செயலாற்று!
கருமத் தனைகளினின்று விடுபட இதுவே வழியாகும்!

செயற்பயனை துறந்திடுவார்
சம நோக்குடையோர்!
சிறப்பாம் இறைபதம் அடைவர் பிறப்பிறப்பு
தளையினை விடுத்து!
மோஹமெனும் சேற்றை முழுமையாய் கடக்கையில் 
இக பர சுகங்களினின்றும் நீ கேட்பவை,
கேட்கப்படுபவை யாவற்றிலும்
வேகமான உறுதியை பெற்றிடுவாய்!

விளக்கம் பல கேட்டு சஞ்சலமடையும் மனம்
களங்கமிலா பரமனிடம் என்று நிலைக்குமோ
அன்றே யோகத்திலும் நிலை நின்றிடுவாய்!

அர்ச்சுனன் பகர்ந்தான் -

ஸமாதியிற் லயித்து பரமனை அடைந்த 
ஸாதகரவரின் குண நலமென்ன? நடப்பது
அமர்வது, பேசுவது எல்லாம் அவர்க்கு
அமைவது எப்படி? அறிவிப்பாய் ஐயனே!

ஸ்ரீ பகவான் உரைத்தார்!

அர்ஜுனா ஆசையனைத்தையும் அறுத்து
மனிதன் நிலையாக நிற்பதென்றோ,
அன்றே ஆன்மாவினால் ஆன்மனை
அறியும் நித்திய நிலைமை அடைவனாகிறான்!

துன்பம் கண்டு துவளாது இன்பத்தில்
இறுமாப்பின்றி
வேண்டுவது, வேண்டாதென சித்த மேதுமின்றி
வீண் சினம், அஞ்சுதல் யாவையும் துறந்தோறே
என்றும் யாவரும் போற்றும் நிலை நின்ற 
புத்தியுடையோன் ஆவான்!

நிலை புத்தியுடையோன் பாசம் கொள்ளான்
எதிலுமே!
நல்லவை அல்லவைகளில் விறுப்பு வெறுப்பற்றவனே
நிலை புத்தியுடையோன் ஆவான்!
தீயவை தவிர்க்க உறுப்பெலாம் உள்ளிழுக்கும்
ஆமையினைப் போல்
மாயையாம் புலன் நுகர் இன்பம் விலக்க
புலன்களை இழுப்பவனே
நிலை புத்தியுடையோன் ஆவான்!

புலன் நுகர் போகப் பொருட்கள் அழிந்தாலும்
மனத்தளவில்

பலன் காணும் ஆசை அழிவதில்லை!
பரமனைக் காணும் நிலை புத்தியுடையோன் - அப்
பற்றை அழித்திடுவான், காண்க!

பற்றினை காக்கும் புலன்கள் என்றுமே
பற்றறுக்க முயலும் கற்றறிந்தோரையும்
இழுத்திடும் பலவந்தமாய்!

புலனைத்தும் ஒடுக்கும் சித்தமுடையோன்
என்னையே கதியென்றெண்ணி
நலமிக்க தவத்தினில் நிலை நின்றால்
அவரே நிலை புத்தியுடையோராவார்!

புலனின்பம் துய்ப் போர் மனம் பேராசை வயப்பட்டால் - அப்
பேராசை பலியா திருப்பின் பெருங் கோபம் எழுதிடுமே
அவர் பாலே!
சினத்தினால் மிகும் அறிவின்மை!
அதன் பின் தடுமாறும் நிலை வரும்!
மனந்தனில் விவேகம் அழிவுறும்!
அதன் பயன் தான் வீழ்ச்சி நிலை! அறிவாயே!

மனமடக்கிய சாதகன் புலநுகர் இன்பமதில்
            தினைத் திடினும்
            விருப்பு வெறுப்பு அடைந்திடான்!
மனத் தெளிவு பெற்றிடுவான்!
            பேருவகை அடைந்திடுவான்!

துயர மெல்லாம் தொலையும்! உள்ளம் தெளிந்தாலே!
தெளிவுற்ற யோகி செயற்கப்பால்
பரமனை ஒன்றி நிலையாவான், அறிவாயே!

மனம், புலன் அடங்காதோர்க்கு நிச்சய புத்தியில்லை,
மனதினில் பாவனை உறுதியற்றோர்க்கு!
மன அமைதி கிட்டாது பாவனை யற்றோர்க்கு!
மேலான சுகந்தான் ஏது அமைதியற்றோர்க்கு!

நீரோடு ஓடந்தனை காற்று இழுப்பதுபோற்
வேரேடு சாய்த்து விடும் புலன் வழி இன்பம்
துய்ப்போரை!
நீண்ட தோளுடை பார்த்தனே, கேள்!
எவர்க்கு புலன்களும், புலன் நுகர் இன்பமும்
எவ்விதத்திலும் வேரேடு வீழ்ச்சியுறுமோ,
            அந்நேரமே,
எழுச்சியுறும் அவன் புத்தி! அதுவே நிலை புத்தி!
ஞான வடிவு காணாதவர்க்கு என்றும் இரவு மயமே!
ஞானியர்க்கோ அது விழித்திருக்கும் காலம்!
அழிவுறும் உலகியல் சுகம் காண விழித்திருப்பான்
பாமரன்!
அற்ப சுகம் யாவும் இரவாகும் பரதத்துவ
ஞானியர்க்கே!

எப்புறமும் நீர் நிறைந்தும்
என்றுமே அசையாதிருக்கும் கடலிற்
எத்தனையோ ஆறுகள் சேருகின்றன,
அதனைக் கலங்கச் செய்யாமலே!
இதனையே போற் மனக் கலக்கமற்ற
            நிலை புத்தியுடையோர்களை
அனைத்து போகங்களும் அடைகின்றன
            எவ்வித மாறுதலும் செய்யாமலே!
அவனே அடைகிறான் மேலான அமைதியை!
வீணே போகம் விரும்பும் மனிதர்கள்
காணார் அமைதியை எந்நாளும்!

விருப்பமேதுமின்றி இறுமாப்பு அற்றிருக்கும்
ஒரு வித ஆசையும் ஏற்கா மனிதனே
அடைவான் அமைதியை!

அர்ஜுனா! அறிந்து கொள்
இதுவே பரதத்துவ நிலை!
பரமனை அறிந்தான் ஒரு போதும் போகம்
கொள்ளான்!
உரமான இந் நிலையிற் அசையா நின்று
உயிர் பிரியும் நேரத்திலும் பேரானந்தம்
பெறுவாய்!

 சாங்க்ய யோகமெனும் இரண்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.

………………………………………………………………………………………..
3-
ம் அத்தியாயம்  கர்ம யோகம்

அர்ஜுனன் சொன்னார் -

கருமத்திலும் ஞானமே மேலென்று கருதினால்
கலக்கமூட்டும் கருமத்தில் என்னை ஏன் தள்ளுகிறாய்
கண்ணா?
குழப்பமுற்ற பேச்சு கலக்குவதாய்
காண்கிறேன், கண்ணா!
தழைக்கும் மேன்மையுற ஏதுண்டோ,
உறுதியாய் கூறுங்கள் அதனை!

ஸ்ரீ பகவான் கூறுகிறார்

இருவகை தவ நிலை (நிஷ்டை) யதனில்
ஸாங்க்ய யோகியர்க்கு ஞான யோகத்தினாலும்
யோகியருக்கு கர்ம யோகத்தினாலும் அமைகிறது
தவ நிலை (நிஷ்டை)

செயலாற்ற துவங்காது இருப்பதனாலேயே
கர்ம யோக நிஷ்டை அமைவதில்லை!
செயலாற்றாமல் துறந்தாலோ
ஸாங்க்ய யோக பேறுகளும் பெறுவதில்லை!

எக்காலத்திலும் எவரும் கண நேரங்கூட
செயற்படாது இருப்பதில்லை!
எல்லாமே ப்ரக்ருதியினாற் ஏற்பட்ட குணங்களால்
தந் நிலை இழந்து
எப்போதுமே மனித குலம் செயலாற்ற 
தொடங்குகிறது!

வலுவில் கட்டாயத்தில் புலனடக்கம் செய்தாலும்
அறிவிலார்
உள் மனம் புல நுகர் இன்பத்தில் திளைப்பது
போலித்தனமாகுமே!

அர்ஜுனா! மனோ திடங் கொண்டு புலனின்பம் தவிர்த்து
அப்புலன் கொண்டே கரும யோகம் புரிபவரே
அறிவுடை பெரியோர் ஆவர்!

சாத்திரம் கூறும் கருமம் ஆற்றுக!
சாதனையாம், செயலாற்றாமல் இருப்பதிலும்
கருமம் ஆற்றுவதே!
செயற் துறந்தால், உடற்பேனுதலும் இயலாது!

தளையேற்றும் செயற் தவிர்த்து
பந்தமகற்றும்
தரமான வேள்வியாய் செயற் புரிவாயாக!
கல்பத் துவக்கத்தில் அயன் படைத்தான் உலகை
யாகங்கள் பல செய்து!
பல்கிப் பெறுகி நலமுடன் வாழ்ந்திட உதவுமே
இவ் வேள்விகள்!

வேள்விகள் புரிந்து வேண்டுவன அருளும்
தேவதைகளை வளரச் செய்!
வீழ்த்தும் தன்னலம் அற்ற பரசேவை செய்து
மேன்மை யுறுவாயே!

வேள்வியில் வளர்ந்த தேவதைகள்
விரும்பியவை யாவையும் வரையிலாது வழங்குவர்!
பெற்ற பெரும் போகம் யாவையும்
உற்ற அத் தேவதைகளுக்கே அர்ப்பணிக்காதவர்
உலகே பழிக்கும் பெருங் கள்வரே யாவர்!

பாவங்கள் அனைத்தையும் போக்கும்,
சான்றோர் உண்ணும் வேள்வியினில் எஞ்சிய உணவு!
பாவியர் உடல் வளர்க்கவே சமைத்து உண்ணும் உணவு
பாவத்தையே உண்பதாகும்!

உணவினின்று உயிரினமும்!
மழையினின்று உணவும், உயர் வேள்வியினின்று
மழையும்
விதிக்கப் பெற்ற கர்மங்களே என்றிருப்பினும்,
வேதங்கள் தான் அளிக்கின்றது கர்மத் தொகுப்பை!
வேதமோ தோன்றியது பரமாத்மாவிடம்!
வேறென்ன வேண்டும் அறிய - யாவுமே
பிரம்ம மயமே யென்று?

பரம்பரை படைப்புச் சக்கரத்தை யொட்டி
விழாத அறிவிலி
உருப்படியற்ற புல நுகர் போகத்தில் வீழ்ந்து
வீணே வாழ்பவரே!

ஆன்மாவில் ஒன்றி இன்புறுதல்
மன நிறைவு அடைதல் - அதிலேயே
சூழ்ந்தாதொரு மகிழ்ச்சி பெறுதல் -
கொண்டோர்க்கு வேறு செயல் ஏதுமில்லை!

அனைத்தும் பிரம்மமே யென்றிருப் போர்க்கு
செயற்பாடுகள் இருந்தும் இல்லாவிடினும்
அனைத்துயிர் களினின்றும் கிடைக்கும் 
பயன்களும் ஏதுமில்லை!

பற்றற்று எதையும் செயலாற்று!
பற்றறுத்து செயல் புரிவோன்
சேருவான் பரமனிடம், அறிந்திடு!
பற்றின்றி செயலாற்றிய
ஜனகர் போற்றப்பட்டார்!
பாரினிற்கு நல்வழி காட்ட
பற்றறுத்த சேவை சிறந்ததன்றோ!

பண்பிலுயர்ந்தோர் சொல்லும் செயலும் என்றும்
பின்பற்றுவார் இம் மனித உலகில் யாவருமே!

அர்ஜூனா, மூவுலகிலும் கடமை
யாதொன்றும் எனக்கில்லை!
அடைய வேண்டுவன அடைந்த பின்னும்
கடமையில் நிற்கின்றேன்!

கருத்துடன் எனையே மக்கள் என்றும் பின்பற்றுவதால்
கவனமாய் கடமை யாற்றாது நானிருப்பின்
உண்டாம் தீங்குகள் பல!
மக்களனைவரும் சீர்குலைவரே
கடமை யாற்றாது நானிருப்பின்!
மிக்க ஒரு சீர்குலைவிற்கும் மாந்தர் அழிவிற்கும்
காரணம் நானாகிவிடுவேன்!
பரத குல செம்மலே! செயற் பற்றுடன் செய்யும் கருமம் போற்
பற்றற்ற ஞானியரும் செயலாற்ற வேண்டும், உலகம் உய்ய!
ஞானியர் யாவரும் பற்றோடு ஆற்றும் செயல்களில்
குழப்பம் வராமல்
ஞாலம் உய்ய தானும் செயலாற்றி பிறரையும்
செயற்படுத்த வேண்டும்!
செயலனைத்தும் எஞ்ஞான்றும் ப்ரக்ருத்ியின் 
ஆணையில் ஏற்படும்!
வியனுலகில் அகங்கொண்டோர்
தானே ஆக்கியதாய் ஆர்ப்பரிப்பர்!

தடந்தோள் படைத்தோனே!
குணம், கர்மங்களின் பிரிவுத் தத்துவம் அறிந்த
ஞான யோகி
குணங்களனைத்தும் குணங்களிலேயே

செயலாற்றுவதறிந்து பற்றற்று இருக்கிறான்
அவைகளில்!
ப்ரக்ருதியால் தோன்றும் குணங்களில்
குறை மதியோர் பற்றுடன் செயற்படுவர்!
பரம ஞானிகளோ யென்றும்
குணங்கொள் அறிவிலியை தடுமாறச் செய்யார்!
எங்கும் நிறை பரமனிடம் ஒன்றி
செயலனைத்தையும் சேர்த்து விடு!
பொங்கும் ஆசைகள், அகங்காரம் தாபங்களினிறி
போரினில் இறங்கி விடு!

குறையேதும் காணா கருத்துடை மனிதன்
என் கொள்கையில் ஊன்றி நிற்பர்!
நிறைவாக அவரும் விடுபடுவார் அனைத்துச் 
செயலினின்றும், அறிக!

குறை கண்டு யென் கருத்தை ஏற்காதோர்
முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம்
உடையோரே!
சீரழிந்து படுபவரேயவர் என அறிவாயே!

இயல்பிற்கு கந்தவாறு உயிரின மனைத்தும்
இயங்குகின்றன!
இயல்பிற்கேற்ற வாறு ஞானியரும் செயல்படுவர்!
செயலாற்றாது எவரும் இருக்க இயலாது!
இழுத்தடிக்கும் மன இயல்பையும் நல் வழியிற் மாற்ற
முற்படுவர் ஞானியர்!

புல நுகர் பொருளனைத்திலும் விருப்பு வெறுப்பு
நிறைந்திருக்க
நலங் காண வேண்டிற் அவ்விரண்டிலும் சிக்காது
பலமாக மேன்மையுற வேண்டும், மானிடன்!
நன்கு பேணும் பிற தருமத்தினும்
சுய தருமம் சிறந்ததுவே குணக்குறை இருந்தும்!
நலமிக்க சுய தருமத்தில் இறப்பதுவும் சிறப்பே
பயம் பயக்கும் பரத் தருமத்தை விட!

அர்ஜுனன் பேசுகிறார் -

கண்ணா! விருப்ப மேது மின்றியே மனிதன்
பர தர்ம சார்பினை கொள்ள
எதனால் தூண்டப் பெற்று பாவம் சுமக்கிறான்?

ஸ்ரீ பகவான் கூறினார் -

பெருந்தீனி, கோபம் ரஜோ குணத்தில் பிறந்தது!
போதுமென்று போகத்தை விடாதான், பாவி!
அவனே, அவனுக்கு பகைவன்!

தீயை மறைப்பது புகை! கண்ணாடி மறைவது அழுக்கில்!
தேகத்தில் கரு மறைக்கப்படுவது சதையினாலும்
கருப்பையினாலும்!
அதேபோல் ஞானத்தை மறைப்பது காமம்!

அர்ஜுனா!
திருப்தியற்ற தீயை ஒத்தது காமம்!
பகையிதுவே பரம ஞானியர்க்கு!
தீர்ந்த ஞானம் மறைந்துவிட காரணம்
கொடுங் காமமே!

காமம் உறைந்து நிற்கும் புலன், மனம், புத்தி
காமத்தை மோஹத்தை கூட்டிடுமே ஞானத்தை மறைத்து!

புலனடக்கி வசங் கொண்ட ஞான விஞ்ஞானத்தை
சீர் கெடுக்கும்
பொல்லா காமத்தை வீறு கொண்டு எழுந்து 
அழித்திடு, அர்ஜூனா!

உடலினும் மேலது புலன்! நுண்ணிய பலமுடை
புலனினும்
உயர்தது மனம்! அதனினும் மேலது புத்தி!
யாவற்றிலும் மேலது ஆன்மா!

தடந்தோள் பார்த்தா!
புத்தியினும் ஆன்மா மேலானது! நுண்ணியது!
பலமுடையாது!
திடமுடன் இதை அறிந்து புத்தியினால்
மனமடக்கி காமத்தை கொன்று விடு!

3-ம் அத்தியாயம்  கர்ம யோகம் முற்றிற்று!
...........................................................................................................


4-
ம் அத்தியாயம்   ஞான, கரிம ஸன்யாஸ யோகம்

ஸ்ரீ பகவான் சொன்னார் -

அழிவற்ற கர்ம யோகம் என்னால் பகலவனுக்கும், பின்னர்
அவனால் அவன் மகன் வைவஸ்த மனுவிற்கும்
அவனால்
அவன் மகன் இக்ஷ்வாகு அரசனுக்கும் சொல்லப்பட்டது!

பரந்தப!
நன்னுயர்ந்த இந்த யோகம் நன்கறிந்தவர்
மாமுனிகள்!
நந்நெடுங்காலமாய் இவ்வுலகில் மறைந்து 
நின்றது இந்த யோகம்!

அர்ஜுனா!

பக்தனும் நண்பனுமான உனக்கு
பழம்பெரும் இந்த யோகம் சொல்லப்பட்டது!
ஏனெனில் மறைத்து காக்க வேண்டிய
இந்த யோகம் சிறந்தது மற்றும் ரகஸ்யமானது!

அர்ஜுனன் கேட்டார் -

கண்ணா! நீங்கள் பிறந்தது அன்மையில்!
கதிரோனோ கல்ப துவக்கதிலேயே உண்டானவன்
அவர்க்கு எவ்வாறு நீங்கள் சொல்லியிருக்க 
முடியும்?
புரியவில்லையே!

கண்ணன் உரைத்தார் -

அர்ஜுனா! பிறவிகள் பல கடந்தனவே, நமக்கு!
அதனை அறியாய் நீ! அறிவேன் நான்!

பிறப்பிறப்பற்ற இறைவன் உள்ளான் உயிரனைத்திலும்!
மறுப்பதற்கில்லா உண்மை இதுவே யாயினும்
உலவுகின்றேன்
மனிதனைப் போல் மாயையில்!

அறம் தேய்ந்து தீயவை வளரும் போது
அந்நேரம் தோன்றுவேன்! உருவுடன் தெறிவேன்!

நல்லோர் வாழ பாவிகள் அழிய
நல்லறம் நிலையாக்க வெளிப்படுகிறேன் யுகந்தோறும்
அறிந்துகொள்!
அர்ஜுனா!

என் பிறப்பும் செயலும் அழுக்கற்ற இறைத்தன்மை யானது
எவன் என்று உணர்வோடு இதை அறிகின்றானோ அன்றே சார்கிறான்
எனையே பிறப்பிறப்பற்று!

அச்சம், சினம், விருப்பு வெறுப்புகளை அழித்தோறும்
எந் நிலையிலும்
அசையாது அன்புடன் எனை புகலடந்தோறும்
அடைவர் எனையே, தூயவராகி!

எவ்வழி நின்று எவ்வாறு வழிபடினும்
அவ்வழியே பக்தரை ஆட்கொண்டு
அருளுகின்றேன்!
கர்ம பலன் விழைந்து வழிபடுபவர் தேவரையே
உலகினோர்!
விரைவினில் அடைந்திடுவார் அப் பலனை
இறையருளால், அறிவாயே!
குணம், செயலினால் படைக்கப் பெற்ற நான்கு வருணங்களுக்கும்
காரணம் நானே! குணமுடையோனே
அறிவாயே!
அழிவற்ற பரமனான நான் கர்த்தா அல்ல உண்மையில்
இதற்கெல்லாம்!
செயற்படு கருமங்களில் அசைவற்ற எனை
தத்துவ ரீதியில் அறிபவர் யாரோ, அவர்
செயற்கட்டுகளில் சிக்கமாட்டார், என்றுமே!
பேரின்ப வீடான முக்தி நாடும் ஞானியரும் ஏற்பர் 
பயனில் கருமங்களை!
பெரியோர் வழி வழி ஆற்றிடும் செயற்களில் 
ஈடுபடுவாய் நீயே!
செயலும் செயலற்றதும் அறியப் படாதது அறிஞராலும்!
செயல் வழியிற் கருமத்தனை விலக்க
சீரிய தத்துவம் கூறிடுவேன், இனி!

செயற்குறித்தும், செயலாற்றாமை குறித்தும்
செம்மையாய் அறிந்திடல் வேண்டும்!
கருமத்தின் நிலை ஆழமானது!

செயலிற் செயலற்றதையும் செயலற்றதில் செயலையும்
செவ்வனே அறிந்தவன் யோகி! அனைத்து
செயலையும் செய்பவன், ஆவான் அவனே!
விதிக்கப் பெற்ற செயலனைத்திலும் யார்
ஆசையும், மமதையும் அற்று உள்ளரோ,
மதிப்பிற்குரிய அவரின் ஞானத் தீயில் செயலனைத்தும்
அழிந்துபடுமோ, அவரை 'பண்டிதன்' என 
ஞானியரும் புகழ்வாரே!

செயற் பல ஆற்றினும் ஏதும் செய்யாதான், ஆவான்
செயற், செயற்பயன் துறந்த உலக சார்பற்ற பக்தன்!

மெய் காக்க ஆற்றும் செயலதில் பாபம் சேர்ப்பதில்லை
மனம், புலன், யாக்கை யடக்கி போகப் பொருளைத்
துறப்பவன்!

தானே வரும் தனங்களில் மகிழாமலும்
அழுக்காறற்று இன்ப துன்பத்திற் கப்பால் நின்றும்
தன் செயல் கை கூடினும், இல்லையெனினும்
சிதறாமல் இருப்போரே, கட்டுப்படார் எதற்கும்!

உலகப் பற்று, உடற் பற்று, மமதை அழித்து
பர ஞானம் பெற்றோர்
உலகம் உய்ய ஆற்றும் செயற்கரிய செயலாற்,
அவரின் கர்ம வினை அழியும்!

வேள்வி, உபகரணம், பொருள், செய்வோர்,
செய்யப்படுபவர், வேள்விச் செயல் யாவும் பிரம்மமே!
வேள்விப் பயனும் பிரம்மமே! யோகியர் யாவரும் பிரம்மமே!

தேவ பூசையென யாகத்தை செவ்வனே செய்வர் யோகியர் சிலர்;
தேவனே வடிவான அக்னியில் தானும் பிரம்மமும் ஒன்றே என்ற
தேர்ந்த சிந்தையில் ஆன்ம நேய வேள்வியை
செய்கின்றார்! பலர்!

பொறிகள் அனைத்தையும் வேள்வி செய்வர்
அடகம மெனும் தீயில் யோகியர், சிலர்!
புலன் சார் பொருளனைத்தையும்
புலன் எனும் தீயிலேயே வேள்விசெய்வர், சிலர்!

புலன் பிராணன்களின் செயலனைத்தையும்
பெரும் ஞான ஒளியான அக்னியில் வேள்வி செய்வர்
யோகியரில் சிலர்!
பெரிய தொரு வேள்வியாம் இது சத், சித், ஆனந்தமே
உருவாகிய பரமனைத் தவிர வேறெதையுமே
சிந்திக்காததால்!
திறம்பட தவம் மேற்கொண்டு அஷ்டாங்க யோகத்தில்

திரவியங்களை வேள்வி செய்வர் பலரும்!
தீர அஹிம்சையில் செயற்படுத்தும் வேள்வியே
ஞான வேள்வியாகும்!

அபான வாயுவில் பிராண வாயுவை வேள்வி செய்வர்
யோகியர் சிலர்!
அதே போல் பிராண வாயுவில் அபான வாயுவை
வேள்வி செய்வர், பலர்!

முறையாக உணவு கொள்வோர் பிராணன், அபானன்
இரண்டையும் அடக்கி
சிறப்பாக பிராணன்களை பிராணங்களிலேயே
வேள்வி செய்வர்!
இவரே பாவங்களை அழித்து வேள்விச் சிறப்பை
அறிவோர் ஆவார்!
குரு வம்ச செம்மலே, அர்ஜுனா!
வேள்வியில் மிஞ்சிய அமுதுண்டு யோகியர்
நிலையான பரமனை அடைகின்றனர்!
வேள்வி யாற்றா மற்றோர்க்கு இவ்வுலகே
நல மளிப்பதில்லை!
பரலோகம் மட்டும் எப்படி நலம் பயக்கும்?

மறைகள் வலித்துக் கூறும் வேள்விகள்
மனம், புலன், உடலால் நிறை பட வேண்டும்!
உறுதியாய் இதையறிந்து செயற் படின்
விடுபவர் முற்றிலும் கருமத் தளைகளினின்றும்!

அர்ஜுனா!

மிகு பொருள் வார்த்து செயலாற்றும் வேள்வியினும்
வெகுவாய் அனைத்தும் நிறைவுறும்
ஞான வேள்வியே சிறப்பு!

தத்துவ ஞானியர் பால் சென்று பணிந்து பணியாற்றி
தியான, ஞான முறை அறிந்துகொள்!
உத்தம பரமாத்ம ஞான தத்துவம்
உவந்தே ஓதுவர் ஞானியரே!

பரமாத்ம ஞானம் அறிந்தால் குழப்பமடையார்!
சராசரம் அனைத்தும் உன்னிடமும்
சத், சித், ஆனந்த மயமான என்னிடமும் காண்பாய்!
பாவத் திற் கெல்லாம் தலையான பாவம்
புரிந்திடினும் அப்பாவியும்
பரமாத்ம ஞான படகிலேறி
பாவக் கடலை கடந்திடுவான் முழுமையாக!
கொழுந்து விட்டெறியும் தீயினில் விறகுகளனைத்தும்
சாம்பலாவது போற்
எழுந்து நிற்கும் ஞானத் தீயில் 
கரும வினை யாவும் பொசுங்கிடுமே!

உள்ளத் தூய்மை அளிப்பதில் ஞானத்திற்கு நிகர்
வேறில்லை!
உள்ளவாறு அதை கர்ம யோகத்தால் நாடி
உள்ளத் தூய்மை யுற்றார், எவரோ, அவரே
ஆன்ம நேயனாவார்!

புலனடக்கி வெற்றிச் சாதனை புரிந்தார்
ஞானத்தை பெறுகிறார்!
சில கணத்திலேயே பரமனை அடையும்
பேரமைதி பெறுகின்றார்!
விவேகம், சிரத்தையற்ற சந்தேக மனிதன்
பெறான் தத்துவ ஞானம்!
வீணே அழியும் அவனுக்கு வியனுலகு, மேலுலகு
சுகம் ஏதுமில்லை!
கரும யோக செயலனைத்தும் நிறை பெற்று
பரமனிடம் சேர்ப்பிக்கும்
அரும் ஞானத்தால் ஐயங்கள் போக்கி

மனம் வசப்பட்ட மனிதனை
கரும தளைகள் பாதிப்பதில்லை!

பரத குலத் தோனே!
அஞ்ஞான உள்ளத்தின் ஐயங்களை களைந்து
அரிய ஞான வாள் கொண்டு அதை அழித்து
கரும யோகத்தில் நின்று போர் புரிய முனைந்திடு!

4-
ம் அத்தியாயம் நிறைவுற்றது

………………………………………………………………………………………….

5-
ம் அத்தியாயம்      -    கர்ம ஸந்யாஸ யோகம்

அருஜுனன் சொன்னார் -

செயற் யோகம், செயற் தனை துறப்பது -
இதன் புகழ் பேசினாய், கண்ணா!
சிறப்புடன் மேன்மையுற உகந்தது எது
இவ்விரண்டில், உரைப்பாய்!

கண்ணன் சொன்னார் -

செயற் துறவு, செயற் யோகம் இரண்டுமே சிறந்த தெனினும்
சாதனைக்கு எளிதான செயற் யோகமே சிறந்தது!
எதனிலும் விருப்பு வெறுப்பவற்றவன் எவனோ,
அவனே பெருந் துறவி!
இவ்விரட்டையை விடுத்தவன் விடுபடுவான்
சம்சாரத் தளையினின்றும்!
துறவு, செயற் யோக பயன் யாவும் ஒன்றேயாம்!
உறுதியான எதைப் பற்றினும் அடையலாம் பரமனை!
ஞானயோகி பெறும் பரம பதம் செயற்யோகிக்கும் உண்டு!
பேணும் இவ்விரண்டின் பயனும் ஒன்றே யென்று
அறிவான் எவனோ அவனே
உண்மைத் தெளிவோன்!

செயற் யோகம் பயிலாமல் பரமனை அடைவது அரிது!
நெடுந்தோள் அர்ஜுனா -
சிறந்த செயற் யோகத் தினாற் அடைந்திடலாம்
பரமனை விரைவினிலே!
புலனனைத்தும் வென்று உளத் தூய்மை கண்டோன்
எவ்வுயிர்க்கும் ஆன்மாவான பரமனை
உளம் நிறைந்து தன் ஆன்மாவும் அவனேயென்றிருப்போர்
செயற்பாடுகள் எதிலும் ஒட்டுவதில்லை.

பார்த்து, கேட்டு, தொட்டு, முகர்ந்து, உண்டு, நடந்து, உறங்கி
பயிலும் மூச்சுவிட்டு, இழுத்து, பேசி, பற்றி, கழித்து 
பலவாறு கண் மூடி, திறந்து இன்னும் பல செயினும்
எல்லாமே அதனதன் செயலன்றி தன் செயலல்ல
என்றறிவோரே தத்துவ மறிந்தோர்!

செயலனைத்தும் இறைவனிடம் அர்ப்பணித்து
பற்றற்று செயல் புரிவோர்
சேரும் பாவம், பயம், இதனால் துயர் உறாமல்
இருப்பாரே நீரில் ஒட்டா தாமரையாய்!

மமதையற்று புலன், மனம், புத்தி, உடல் பற்றின்றி
மனத் தூய்மை வேண்டி ஆற்றிடுவார் செயல்களை
கரிம யோகியர்!
செயற் பயன் துறந்து அமைதியுறுவார் செயற்யோகி
இறைவனை அடைய!
செயற் பயனில் பற்றுடையோர் 
அலைந் தழிகிறார் ஆசையினால்!
எல்லாவற்றையும் துறந்து மனம் கட்டுண்ட யோகியர்
எதையும் செய்யாமலும் எதனாலேயும்
செய்விக்காமலுமே
யாக்கையின் ஒன்பது வாயிலின் செயலனைத்தும்
துறந்து
யான்றும் இன்புறச் செய்யும் சத் - சித் - ஆனந்த
பரமனை அறிந்தே மகிழ்கிறான்!
மனிதனின் செயற்படும் தன்மையை இறைவன்
ஆக்குவதில்லை!
பணித்த செயலும் அவனால் படைக்கப்படுவதில்லை!
செயற் பயனின் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை
ஆனால்
செயற்படுவதோ என்றும் இயல்பு தான்!
பரமன் ஏற்பதில்லை என்றும் பாப, நற்செயல்களை!
பாமரரின் ஞானம் மறைக்கப்படும் அஞ் ஞானத்தால்!
பரந்து விரிவது மோஹமே இதனால் அறிக!

அஞ்ஞானம் அழிவுறும் பரதத்துவ பேரறிவால்!
அதுவே விளைவிக்கும் நல் ஞானத்தை!
ஆதவன் போல் அதுவே ஒளிரச் செய்யும் பரமனை!
அவனை காணவும் செய்யும்!

மனம், புத்தி பரமனிடம் ஒன்றி - அவனிடம்
இடையறா நெருக்கம் கொண்டோர்
ஞான மிகுதியால் பாப மொழிந்து
மனம் போல் மரணமிலா பெரு வாழ்வடைவர்!

தத்துவ மறிந்தோர் நல் நிலை பிராமணர்களையும்
பசுக்களையும்
இத்தரை வாழ் யானை, நாய் மற்றும்
எத்தனையோ ஈனர்களையும் சமமாக பாவிப்பார்?

சம நோக்குடையோரே வெற்றியுறுவர்
தன் வானாளில் பார் அனைத்திலும் காரணம்
செம்மையான மாசற்ற சத் சித் ஆனந்த
பரமனிடமே மனம் நிலைத்திருப்பதேயாம்!

விரும்பியது கிடைத்தும் மகிழாமலும்
விருப்பமற்றதில் கலங்காத ஞானவான்
அருமந்த அருட் கடல் பரம் பொருளில்
ஒருங்கே நிலைத்து ஒன்றிடுவா ரென்றோ?

புல நுகர் பயனில் பற்றற்றவன் 
நலமிக்க தவம் தரும் நல் சுகத்தில் மகிழ்கிறான்!
பெருந் தவ யோகத்தினாற் ஆனந்த மய
பரமனிடம் ஒன்றி நிலையான இன்பம் காண்கிறான்!
புல நொடு புல நுகர் பொருளும் சேர
தரும் சுகத்தில் மகிழ்வர் பற்றுடையோர்!
பெருந் துயர் தரும் அவ் வின்பத்தால்
இன்புறார் அறிவுடையோர்!

காமம், கோபம் தரும் எழுச்சியை
காணும் இப் பிறவியிலேயே உடல் அழியு முன்
எவன் பொறுத்துக் கொள்வானோ
அவனே யோகி! அவனே சுகம் பெறுபவன்!

உறுதியுடன் ஆன்மாவிலேயே சுகங்கண்டு
பேரின்ப நல் ஞானம் யார் பெறுவாரோ, அவரே
உயர்ந்த சத் சித் ஆனந்த வடிவத்தில்
ஒன்றிடும் கர்ம யோகி யாவார்!

பாவமனைத்தும் அழிந்து, ஞானம் கொண்டு
ஐயம் தீர்த்து
பாரில் அனைத்துயிர் நலத்திற் நாட்டம் கொண்டு
சலனமற்றிருப் போரே
அறிவாரே பரப் பிரம்மத்தை! அவரே
அடைவர் எளிதினில் சத் சித் ஆனந்த பேரின்ப
நிர் குண, நிராகர பரமனை!

ஆசை, சினம், விலக்கி, மனம் வசப்பட்டு பரமனை
நேரிடையாய் அறிந்தோரைச் சுற்றி
அமைதி நிறை பரப்பிரம்ம பரமனே
நிறைந்து நிற்பார்!

புல நுகர் போகம் துறந்து - இரு
புருவ இடையில் பார்வை நிறுத்தி
பிராண, அபான வாயுவை சமன் செய்து
மனம், புத்தி யடக்கி
உறும் ஆசை, அச்சம், சினம் அற்று
பரமாத்வாவை சிந்திப்போர்

அருகாத நிலையான விடுதலை
பெறுபவரே யாவர்!
யானே அனைத்து யாகம், தவத்தினையும்
ஏற்பவன் என்றும்,
அனைத்துலக நாயகர்க்கும் மேலான 
இறைவனென்றும்
அனைத்து உயிரினங்களுக்கும் உற்ற
நண்பனென்றும்
அன்பும் அருளும் நிறைந்த தன்மை
உடையவானன்றும்
அறியும் என் பக்தன் என்றும்
பேரமைதி பெறுகிறான்!

ஐந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது!
………………………………………………………………………………..

6-
ம் அத்தியாயம்    -    ஆத்ம ஸம்யம யோகம்

செயற் பயன் சாராது செயற் புரிவோன்
துறவியும் யோகியும் ஆவான்!
செயற்கரிய வேள்வி மட்டும் துறப்போன் துறவி ஆகான்!
செயற் மட்டும் துறப்பவனும் யோகி யாகான்!

அர்ஜுனா!

துறவே யோகம் என்றறிந்திடு!
பயன் வேண்டுதல்
துறக்காத எவனும் யோகியாகான் அறிந்திடு!
பயன் கருதா செயற்புரிவோர் அடைவரே
யோகமதை!
பரம் பொருள் சிந்தையை பிற விருப்பமேதுமின்றி
பயிலும் யோகவான் மேன்மை யுறுவார்!
புலநுகர் இன்பங்களிற் பற்றின்றி செயற்
பற்றறுத்து வேண்டுபவை துறந்தாரே
உலகினில் பெருமையாய் பேசப்படும்
யோக சீலராவார்!

தனக்குத் தானே தான் மீள வேண்டும்
ஸம்ஸாரக் கடலினின்றும்
தன்னைத் தானே வீழ்த்திக் கொள்ள லாகாது!
தானே தான் நண்பன்! தானே தான் பகைவனுமாவான்!
மனம், புலன் கூடிய யாக்கையை அடக்கி ஆளும்
ஜீவாத்மா

தனக்குத் தானே நண்பன் ஆவான்!
குணம் சிதைந்து தீமை பயக்குமே அடக்கியாளா
ஜீவான்மா!
சத், சித், ஆனந்த மயமான பரமனிடம் நிற்கிறான்
நிலைத்து தட்ப வெப்பம், இன்ப துன்பம்,
மான அவமானம் அடக்கி அமைதியுறுவேனே!
சித்தமெல்லாம் பரமனைத் தவிர வேறெதுவுமில்லை!

பரமனை யடைந்த யோகியர்
பெற்றாரே நிறைவு ஞான விஞ்ஞான மதில்!
பற்றறுத்து நிற்பர் எந் நிலையிலும்
உற்ற சம நோக்கில் மண்ணும் பொன்னும் ஒன்றே
யென்றிருப்போர்!
பரநலம் பேணுதல், நட்பு, பகை எதிலும்
சாராதான் இடை நிலையான்!
பிறரால் வெறுக்கத் தக்கோர், உறவினர்,
நல் மனிதர், பாவியர் யாரையும்
ஒரு நாளும் பிரிக்காது சமமாய் காண்போனே,
சிறந்தோனே!

மனம், புலன் சேர்க்கையின் யாக்கை அடக்கி,
அனைத்தையும் துறந்து,
தனக்கென யேதும் சேர்க்கா யோகியர்
தனியிடமமர்ந்து இடையறா முயற்சியில்
இணைக்க வேண்டும் பரமனிடம் ஆன்மாவை!

தூய்மை மிகு நல்லிடமே தியான யோகம் புரிய!
தரை மேல் தருப்பை, மான் தோல் விரித்து
தாழ்வும், உயரமும் அதிக மின்றி
விரித்த துணி மேல் அமர வேண்டும்!

உரிய நல்லாசனம் அமர்ந்து
சரியாக மனம், புலன், செயல் வசங் கொண்டு
சீரிய உள்ளத் தூய்மை காண யோகம் பயில
வீரியமாய் ஒரு முனைப்படும் மனம் வேண்டும்!
அசைவற்ற உடல், தலை, கழுத்துடன்
உறுதியாய் அமர்ந்து
திசை வேறு பார்க்காமல், நாசி நுனியினில்
ஒரு முனை படுத்த வேண்டும்; பார்வையை!

பிரம்மசர்ய நோன்பினில் திளைத்து
அச்சமேது மின்றி அமைதியுற்று
பெறும் தியான யோகத்திற் விழிப்புணர்வோடு
பரமனை யடைய நினைக்க வேண்டும்; மனமடக்கி!

மன மடக்கிய யோகியர் இடையறாது
குணம் காக்கும் பரமனான என் பேருருவில் இணைந்து
மட்டற்று விளங்கும் பரமானந்த பேரமைதியை
அடைகின்றார்!
அளவிற்கதிகமாய் உண்போர், அளவாகவும் உண்ணாதிருப்போர்
அதிகமாய் உறங்குவோர், உறங்காமலே இருப்போர்
இவர்க்கு இல்லை என்றும் தியான யோகம்!

அளவோடு உண்டு, செயற் முயற்சி செய்து
அளவோடு உறங்கி விழிப்போர்
மாளாத் துயர் துடைக்கும் யோகம்
கைகூடி வரும் இவர்க்கு, அறிக!

போகப் பற்றறுத்து, முற்றிலும் மனம் வசப்படுத்தி
பரமனிடம் நீங்கா நிலைப்படும் மனமுடையோன்
முதிர்ந்த யோகமுடையோன் ஆவான்!

மன மடக்கி வெற்றி கொண்ட யோகியர்
ஏற்கும் பரமனின் தியானம்
காற்றற்ற நிலையில் அசையா
தீபச் சுடர் போன்றது!
யோகப் பயனாற் கட்டுண்ட சித்தம்
ஓய்ந்து நிற்க
யோகத் தவத்தில் தூய்மையான மனம்,
நேரில் பரமனைக் கண்டு களிப்புறுமே!

புலன்களுக்கப்பால் காணும் முடிவிலா ஆனந்தம்
அனைத்தையும் ஆண்டு கொண்டு
புனிதமான பரமாத்ம உருவத்திலிருந்து
அகலா நினைவிற் இருப்பவர் எவரோ,
பரமனை அடைவதன்றி வேறெந்த பேற்றையும்
உயர்வென கருதாது
பெருந்துயரிலும் கலங்காது பரமனிடம்
ஒன்றுபவர் எவரோ, அவரே,

இடும்பு நிறை சம்சாரத் தளையினின்று
விடுபடும் யோகத்தை அறிந்து
தடுமாறாது சோர்வுற்ற வீரத்தை
மகிழ்வுடன் பேணும் யோகியர் ஆவாரே!

வேண்டி பெறக் கூடிய இன்பமனைத்தையும்
மீதமின்றி துறந்து
வீரமுடன் மனத்தினாற் புலனாட்டம்
அத்தனையும் அடக்கி,

முறையான பயிற்சியில் விலக வேண்டும்
உலகியற் இன்பங்கள்!
உறுதியுடன் பரமன் அருகிருந்து
வேறெதுவும் எண்ணாது நிலை பெற வேண்டும்!

நிலை யின்றி அலையும் மனம் இக இன்பம் நாடாது
தலையாய பொறுப்பாய் தடுத்து நிறுத்தி
நிலைக்கச் செய்தற் வேண்டும் பரமனிடம்!

நிலையாக பரமனிடம் ஒன்றியோர்
அமைதியுற்றோர், தீச் செயலற்றோர் யாவரும்
நிரந்தர இன்பமான பேரானந்தத்தை
செவ்வனே யடைவர்!
இத்தகை யோகியர் இடையறாது
ஆன்மாவை நிலை நிறுத்தி
இனிதாக எளிதாக பரமனை அடையும்
நிறைவான பேரின்பம் அடைவரே!

எங்கும் நிறை இறைவனிடம் இரண்டற
கலந்த யோகமுடையோர்
எல்லா உயிரிலும் இருக்கும் ஆன்மாவில்
யாதுலகும் கலந்திருக்கக் காண்கிறார்!
அனைத்துலக உயிரின் ஆத்மாவும் 
அநாதி பிரம்மமான நானே!
அனைத்தும் என்னுள் அடக்கம்! இதை
அறிவான் எவனோ அவனுக்கு தென்படுவேன், நான்!
அவனும் தென்படுவான் எனக்கு!

எந் நிலையிலும் எவ்வாறு செயற்படினும்
என்னிடமே செயற்பட்டு, ஒன்றி
அனைத்துலகு உயிரின் ஆன்மாவான எனையே
வழிபடுவோர், ஆன்ம நேயரே!

சராசரங்கள் அனைத்தையும் தன் போலவே
சமமாகப் பார்த்து
சகல மக்களின் சுக துக்கங்களையும் தேடி
தன்னுடையதாகவே ஏற்பான் உயர்ந்த யோகி!

அர்ஜுனன் சொன்னார் -

மதுசூதனா! நான் அறியவில்லை சம நோக்கு
யோகத்தை
மனமதின் சஞ்சலத்தினால்!
ஏனெனில் கண்ணா, எதிலும் நிலை நில்லாது
அலையும் மனம் புலன்களைக் கலக்கும்!
என்றும் திடமும் வலிமையும் கொண்ட மனதை
அடக்குதல் என்பது காற்றை தடுத்து நிறுத்தும்
செயற்கு ஒப்பாகாதா?
பகவான் உரைத்தார் -
பார்த்தனே, சஞ்சல மனம் வசமாவது கடினம்!
குந்தி மகனே, கடும் பயிற்சியிலும்
உத்தியிலும் தான் மனம் வசமாகும்!
மன வசமற்றோன் அடைய இயலாது யோகத்தை!
மனமடக்க முயலும் எவனும் அடைவது எளிது
அவ் யோகத்தை!

அர்ஜுனன் உரைத்தார் -
யோகத்தில் பற்றுடை யோகியும் மரண காலத்தில்
மனவசமற்றுப் போனால்
யோக சாதனையாளன் இவன் கதியென்ன
பரமனை அடையாவிடில்?

பரமனை அடையும் தடமறியாது
மயக்கமுற்று, வருந்தி
பற்றுக் கோலின்றி மனிதன் வீணே
இரு நிலையினின்றும் நழுவி சிதறிய மேகம் போல்
அழிந்திடானோ?
கண்ணா!
என் ஐயங்களை யெல்லாம் போக்க
உனையன்றி, யாருண்டு?
என்றும் எவராலும் இதைச் செய்ய இயலுமோ?

கண்ணன் சொன்னார் -

இறைவனை அடையும் சாதனையாளர்
எவர்க்கும் தாழ்வில்லை!
எந்நிலையிலும் இங்கோ, மேலுலகிலோ
அழிவேதுமில்லை!
யோக சாதனை படைத்தோர் ஏதோ ஓர் நிலையிற்
அதனின்று நழுவிடினும்
உயர்ந்த தேவருலகில் பல்லாண்டு வாழ்ந்து, பின்
வளமுடையோர் வீட்டில் பிறப்பெடுப்பர்!

திட சித்தமுடையோர் அதனின்று வழுவினும்
மேலுலகு, பூவுலகில் பிறக்காது
திறன் மிகு ஞானியர் குலத்திலே
பிறக்கவும் வாய்ப்புண்டு, அறிவாயே!

அவரின் முப்பிறவி யோக சாதனை மனப்பதிவுகள்
மற்றும் சமபுத்தியை மீண்டும் பெறுவான்
யோகியர் குலம் தோன்றி; எளிதாக!
அதன் பயனால் முன்னிலும் முனைப்பாய் மீண்டும்
பரமனை அடைய முயன்றிடுவான்!

விழும் நிலையிற் யோகம் மறந்தும்
செழும் சீமான் வீட்டில் பிறந்திடினும்
விரும்பும் இறைவனால் ஈர்க்கப்படுவார்!
சம புத்தி யோக முடையோன் மனம் நாடும்
பயன் நல்கும் செயற்தனை நாடாது
இறைவனை அடைய தடையனைத்தையும்
தாண்டி முன்னேறுவான்!

முதிர்ந்த யோகியரின் பரந்த பல பிறப்பு
பயிற்சியின் வலிமையினாற்
குதிர்ந்த இப் பிறவியிலேயே ஸித்தி பெற்று
பரிசுத்தனாய் பரமனை அடைந்திடுவாறே!

தவம் புரிவோர், சாத்திரப் புலமையுடையோர்
பயன் கருதி செயற்படுவர் பாரினிலே!
இவர்கள் யாவரையும் விட உயர்ந்தோர்
யோகியரே!
இதனிலே அறிவாய் அர்ஜுனா, நீ யோகி ஆகி விடு!

அனைத்து யோகியருள் எவர்
முனைந்து இக்கருத்தில் ஈடுபாடு கொள்வாரோ
அவரே, என்னால் உயர்ந்தோனாகப் போற்றப்படுவார்!

6-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
…………………………………………………………………………….

7-
ம் அத்தியாயம் - ஞான விஞ்ஞான யோகம்

ஸ்ரீ பகவான் உரைத்தார் -

பார்த்தனே, அளவிலா அன்புடனும், ஈடுபாடுடனும்
யாவும் நிறைந்த அனைத்து ஆன்மாவாகிய எனை
எவ்வாறு அறிவாயோ, அவ்வாறே புகல்கின்றேன்!

எதையும் மேலும் அறிந்து கொள்ள தேவையற்ற
சீர் தத்துவம் அறிந்த பின்
அதனையே விரிவாக, முழுமையாக சொல்லிடுவேன் உனக்கு!

மக்களில் யாரோ ஒருவன் மட்டும் தத்துவ மேதுமின்றி
எனையடைய முயல்கின்றான்! அதனையே
மேலான யோகியர் தத்துவ ரீதியாக எனை 
அறிகின்றார்!

ஐம் பெரும் பூதங்கள், புலன்கள் பத்து, இவை
'
அபரா' எனும் என் ஜட சக்தி!
இதனின்றும் வேறான 'பரா' உலகை தாங்கிடும்!
இதுவே எனது அசையும் ப்ரக்ருதி!

உயிரனைத்தும் உண்டாகி ஒடுங்குவது
பரா, அபரா எனும் எனது சக்தியினால் தான்!
உலகனைத்தும் தோன்றி, மறைய காரணன் நானே!
எனையன்றி வேறெதுவும் காரணம் இல்லை
உலகு இயங்க!
நூலினில் நூலினால் ஆன மணிகளாய் 
உலகனைத்தும் என்னிடம் கோர்க்கப்படுகிறது!
குந்தி மகனே, கேள்!

நீரில் சுவையாகி, கதிர் மதிகளில் ஒளியாகி
மறைகளிற் பிரணவமாகி, விண்ணில் ஒலியாகி
நிறைவான ஆண்மையாய் ஆண்களில் கலந்தே
இருக்கின்றேன், என்றும்!

புனித நறுமண மாவேன் மண்ணிலே;
ஒளியாக நிற்பேன் தீயிலே!
இனிதாம் உயிராக இருப்பேன்
உயிரினங்களில்;
தவசிகளின் தவமாயும், இறையிடத்தில்
ஓங்காரமாயும் நிற்பேன்!

அனைத்துலகின் ஆதார விதை நான்!
அறிஞர்களின் அறிவாகவும்; ஒளிமிக்கோரின்
ஒளியாகவும்
இருப்பவன் நான்! அறிந்து கொள் அர்ஜுனா!

பரதகுல செம்மலே!

ஆசையற்ற வளமையுடை வல்லோரிடம்
இருப்பேன்!
அறத்திற்குட்பட்ட உயிரினங்களின்
காமத்திலும் இருப்பேன்!
சத்வ, ரஜோ, தாமஸ குண உணர்வினை
அளிப்பவன் நானே!
சரியாகச் சொன்னால் நான் அவைகளிடமும்
அவை என்னிடமும் இல்லை!

சத், ரஜஸ், தாமஸ முக்குண மளிக்கும்
உணர்வுகளிற் மயக்க முறுமே உலகும்
உயிரினமும்!
சத்தியமான, குணங்களுக்கு அப்பாற்பட்ட
அழிவற்ற எனை அறிவதில்லை இவ்வுலகு!

இறைத் தன்மைக்கப்பாற்பட்ட அற்புதமான
முக்குணமெனும் எனது மாயையை
கடப்பதென்பது அரிதாம் யாவர்க்கும்!
எனினும் எவர் எனையே என்றும் புகலென்று
கொள்வாரே!
அவரே மாயையினின்றும் உலகியலிலிருந்தும்
விடுபடுவர்!

மாயையில் அறிவிழந்து அரக்கத் தன்மை கொண்டு
தாழ்ந்து இழி செயற் புரிவோர்
மாதவன் எனை வழிபடாது மேலான நந்நிலைக்கு
நான் தான் என்பதை ஏற்பதில்லை என்றும்!

உலகியல் பொருள் வேண்டியும் துயர் தீரவும்
எனையறிய ஆவலுற்றோரும்,
உயரிய மெய்ஞானம் பெற்றொருமான
நற்செயற் மாந்தரும்,
எனையே வழிபடுவர், எஞ்ஞான்றும்!

என்றும் என்னிடம் ஒன்றிய ஞானி பக்தரில்
மேலானவன்!
எனை நன்கறிந்த ஞானிக்கு
இனியவன் நானே!
எனக்கு இனியோனும் அவனே!

பக்தர் பலரும் சிறந்தோர் எனினும்
பெரிதும் எனை தானகவே கருதுவோர்
ஞானியர்!
பற்றோடு என்னிடம் மனமும் புத்தியும்
ஒன்றிடும் ஞானி நிலைபெறுவான் என்னிடம்!
பிறவி பல எடுத்து முடிவில் ஞானம் அடைவோன்
அரிதான எனை அனைத்தும் வாசுதேவனே
என புகலடைகிறான்!
அம்மகானே மிகமிக அரிதானவன்!
உலகின்பப் பொருளின் ஆசையினால்
அறிவிழந்து தன் இழி இயல்பினால்
அந்நெறி கை கொண்டு மற்று பிற
தேவதைகளிடம் புகலடைந்து வழிபடுவர்!

பயனிற் பற்றுள்ள பக்தன் எந்த தேவதையை
வணங்குவானோ
உயர்ந்த ஊக்கமளித்து அத் தேவதையின் பால்
மனம் அசையாதிருக்கச் செய்கிறேன்!

அசையா பக்தியுடன் அத் தேவதை
பூசை புரிவோர்க்கு அவன் விரும்பும்
அத்தனை பயன்களையும் ஐயமின்றி
அவனை அடையச் செய்கிறேன்!
பயனிற் பற்றுடன் புரியும் பூசையும்
அறியக்கூடியதே என்றும்!
பூசைப் பயனால் அத் தேவதைகளை அடைவார்
அவரே!
எப்படி வழிபடினும் என் அன்பர்கள்
எனையே வந்தடைவர்!
மனம் புலன்களுக்கு அப்பாற் பட்டு
மேன்மையுற்ற, அழிவற்ற இணையற்ற
என்னை சத் சத் ஆனந்தனாக கருதாமல்
மானிடனாகவே எண்ணுகின்றார், அறிவிலிகள்!

யோக மாயையால் மறைந்தவன் நான்
பிறப்பிறப்பற்றவன்!
என்றும் எனை பிறப்பு இறப்பு உடையோன்
என்றே கருதுவார் அறிவற்றார்!

விசயனே, முன்பே வாழ்ந்து மறைந்த
இருக்கின்ற, இனி இருக்கப் போகிற
உயிரனைத்தையும் அறிவேன், நான்!
ஊக்கமும் பக்தியும் இலா மனிதன்
அறிவதில்லை, இதையெல்லாம்!

பரத குல செம்மலே!

பாரினில் விருப்பு வெறுப்புகளாற் தோன்றும்
சுக துக்கங்கள்!
இரட்டையான இதன் மயக்கத்தில்
அறியாமை மிகக் கொள்ளும் உயிரினமனைத்தும்!
பயன் கருதா செயற் புரிவோர்
விடுபடுவர் விருப்பு வெறுப்புகளினின்றும்!
பற்றறுத்த அன்பர் அனைத்து நிலையிலும்
எனையே சார்த்து வழிபடுவர்!

மூப்பு இறப்பு தவிர்க்க முயலும் சாதகன்
பிரம்மத்தையும் நிலையானவற்றையும்
மேலான நிறைவுற்ற செயலனைத்தையும்
அறிகின்றான் தெளிவாக!

எனை சரணைடைந்து மூப்பு, மரணத்திலிருந்தும்
விடுபடுவார்!
பிரம்மத்தையும், ஜீவனையும் நிறைவான
கர்மங்களையும் அறிந்து கொள்வார்!

எந் நிலையையும், எந்த தத்துவங்களையும்
தன்னகத்தே கொண்ட எனை
மரண நிலையிலும் எவன் அறிகிறானோ, அந்த
ஒன்றிய மனத்தோன் எனையே முழுதும் அறிவான்!
நிறைவில் என்னையே அடைவான்!

7-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
………………………………………………………………………………..

8-
ம் அத்தியாயம் - அக்ஷர ப்ரம்ம யோகம்

அர்ஜூனன் கேட்டார் -

எல்லோரிலும் உத்தமமான கண்ணா!
பிரம்மம், அத்யாத்மகம், கர்மம், அதிபூதம்,
அதிதைவம் -
இவை யனைத்தும் என்ன?
விளக்குவாய் கண்ணா அன்புடன்!

அதியஞ்ஞன் என்பவன் யார்?
அவனின் உருவம் என்ன?
அதி தூய்மையுடன் ஒன்றிய மனத்துடன்
இறப்பு நிலையிற் நீங்கள் அறியப்படுவது
எப்படி?

ஸ்ரீ பகவான் பகர்ந்தார் -
உயர்ந்ததும் நிலையானதும் தான் பிரம்மம்!
அதன் உள்ளூரு ஜீவான்மா!
உலகமனைத்தின் தியாகம், செயல் யாவும்
பிரம்மத்தின் பேரால் அழைக்கப்படுகிறது!

தோன்றி மறைவது அதிபூதம்!
நான்முகம் கொண்ட பிரம்மன் 'அதி தைவம்'
என்றுமே யாவரின் உடலிருக்கும் பரமனான நானே
'
அதியஞ்ஞன்', அறிவாயே!

இறப்பிலும் எனையே நினைத்து உயிர் நீப்பார்!
உறுதியாய் எனையே அடைவர் அவர்,
ஐயமில்லை!
குந்தி மகனே, கேள்!

இறக்கும் நேரத்தில் மனிதன் சிந்திக்கும் உருவையே
பிறப்பிலும் அடைகின்றான் எப்போதும் அதையே!
நினைப்பதால்!

எக்காலமும் எனையே நினைத்து போர் புரிவாயாக!
என்னிடம் அளித்து விட்ட மனம், புத்தியுடன்
எனையே அடைவாய் ஐயமின்றி!

தெய்வ தியான பயிற்சி யோகத்திற்
திளைத்து பிற பலவற்றில் மனம் செலுத்தாமற்
தூய்மையாய் இறைவனை சிந்திப்போர்
ஒளி மிக்க பிரமனையே அடைவர்!

தொன்மையான, யாவற்றையும் அறிந்த,
யாவரையும் காக்கும் ஆதவனைப் போன்று
ஒளிமிக்கோனாக உள்ள பரமனை
எவனொருவன் எப்போதும் நினைக்கின்றானோ,
இறக்கும் நேரத்திலும் அவனே
புருவமிடை உயிர் நிறுத்தி அசையா மனங்கொண்டு
அந்த ஒளிமிக்க பரமனையே அடைகின்றான்!
மறை பேசும் சத், சித், ஆனந்த பரமபதம் எதுவோ,
பற்றற்ற துறவிகள் தேடுவது எதுவோ,
'
பிரம்மசாரிகள்' நோற்கும் நெறியெதுவோ,
அப்பரமபதம் பற்றி கூறுவேன், கேள்!

எவ்வழியும் புலனடக்கி, வெற்றுரை புகாது
தடுத்து,
கட்டுண்ட மனதில் இவ்வுயிரை 
உச்சியில் நிலைக்க விட்டு, யோக மதில்
ஓங்காரத்தை சிந்திப்போர் உயர் நிலை
அடைகிறார்!

சிந்தனை வேறேதுமின்றி இடையறாது
எனை நினைத்து, சிக்கெனப் பிடித்து
ஒன்றிட்ட யோகியர்
அடைவார் எனையே, எளிதினில்

உயர்நிலை சித்திகள் பெற்ற புண்ணியர்
எனை சார்ந்த பின்னர்
துயர் தருவதும் நிலையற்றதுமான
மறுபிறவி யடைவதில்லை ஒரு போதும்!

அழிந்து எழும் தன்மை யுடை தேவருலகு
யாவையும் அடைந்தாலும்
திரும்பப் பிறவியுண்டு, அர்ஜுனா!
அழியா நிலையிற் காலத்தை கடந்த
எனை அடைந்த பின்
மறுபிறவி யென்பதில்லையே!

ஓராயிரம் சதுர்யுகம் ஓர் பகல், மறு
ஓராயிரம் சதுர்யுகம் ஓர் இரவு பிரமனுக்கு!
ஆராய்ந்திந்த தத்துவப் பொருளை
தொடக்கம், முடிவை அறிபவரே, யோகியர்!

பிரமனின் பகல் தொடக்கத்தில் எல்லா உயிரும்
அவரிருக்கும் உடலில் வெளிப்படும்!
அவரின் இரவின் தொடக்கத்தில்
அவையாவும் அவருள் அடங்கும்!

இவ்வுயிரினங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் தோன்றி
தன்னிலை மறந்து
இப் ப்ரகிருதியிடம் வசப்பட்டு
பிரமனின் இரவில் மறைந்து
பகலில் மீண்டும் தோன்றும்!

தனித் தன்மை, நிலை பாட்டுடன் கூடி,
அறியப்படாத பரம் பொருள்,
பரமனின் இரவு, பகலில் அனைத் துயிரும்
மடிந்து, தளிர்ப்பது போல்
அழிவது மில்லை, எழுவதும் இல்லை!

அழிவற்ற தோன்றா நிலையென்ற உயர்நிலை
அடைந்து, மீண்டும்
திரும்பாதிருக்கும் நிலை யாதோ,
அதுவே என் பரமபதம்!

உயிரனைத்தும் யாரிடம் அடக்கமோ,
உலகனைத்தும் யாரால் நிறைந்திருக்கிறதோ
உயர்ந்த அப்பரமனை வேறெதிலும்
பற்றில்லாதோர் எளிதில் அடைவர்!

உடல் நீத்த பின் எவ்வழி சென்று
திரும்பி வாரா நிலையையும்
வேறெவ்வழி சென்று திரும்ப வரும்
நிலையையும், சொல்வேன் அர்ஜுனா!

அக்னி எவ்வழி ஒளிருமோ, பகற் கடவுள் எங்கு
இருப்பாரோ,
அங்கு வளர் பிறை தேவதை பிரகாசிப்பது எங்கோ
உத்தராயனக் கடவுள் எங்கு ஒளிர்வாரோ, -
இத் தேவதையெல்லாம், பிரம்மத்தை
அறிந்த யோகியரை
ஒவ்வொரு நிலையாக பரமனை
அடையச் செய்கின்றனர்!
பற்றுடன் செயலாற்று வோர்
இறந்த பின் - புகைக் கடவுள்
இரவு தேவதை தேய் பிறைக்கான தெய்வம்
ஆறுமாத தக்ஷினாயன புருஷர் - இவ்வழியில்
அந்தந்த தேவதைகளாற் வரிசையாக தொடர்ந்து
சந்திர மண்டல ஒளியை அடைந்து
நற்செயற் பயன்களை அனுபவித்ததும்
மீண்டும் திரும்புவர்!

'
தேவயானம்' எனும் வழி செல்லும் பற்றறுத்த
யோகியர்
திரும்பி வாரா பரமகதி யடைவர்!
'
பத்ருயானம்' எனும் வழியிற் செல்லும்
பற்றுடன் செயலாற்றிய யோகியர்
பிறப்பிறப்பை சந்திப்பர், திரும்ப வந்து!

வழி இரண்டிதனை கொள்கை பிடிப்புடன்
அறியும் யோகியர் மனமயக்க மடையார்!

வழி எதெனிலும், காலங்களிலும் 
சம புத்தி கொண்டு எனையடையவே
முயற்சி செய்!

யாகம், தவம், தானம் இதன் பயனனைத்தையும்
கடந்து செல்கிறான், யோகி!
யாவற்றையும் கடந்த அவன்
நிலையான பரமபதம் அடைகிறான்!

8-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
…………………………………………………………………..

9-ம் அத்தியாயம்    ராஜ வித்யா, ராஜ குஹ்ய யோகம்

ஸ்ரீ பகவான் உரைத்தார் -

துயர்நிறை பாரினின்றும் விடுபட எதை அறிதல் வேண்டுமோ
                        அந்த
தீர்ந்த முடிவான விஞ்ஞானத்துடன் கூடிய ஞானத்தை
குறைகாணா உனக்கு கூறிடுவேன், நன்கு!

தத்துவப் பொருளான இந்நல்ஞானம் வித்யைகள்
அனைத்திற்கும் அரசு!
தரும நெறிக்கு உட்பட்ட புனிதமான, எளிமையான
கண் கூடாய் உணரத்தக்க, அழிவற்ற இஞ்ஞானம்
மறைத்துப் போற்றப் பட வேண்டியது!

அர்ஜுனா,
இஞ் ஞானத்தை அறியாதார், இதில் நம்பிக்கையற்றோர்,
எஞ்ஞான்றும் எனை அடையாது
பிறப்பிறப்பில் உழல்வார்!

அருவமான, பரமனான நான் பனியிற்
நீர் போல் நிறைந்துள்ளேன்!
அனைத்துயிரும் நிலை பெற்றுள்ளது என்னால்!
ஆனால், நானோ நிலை பெறவில்லை, எதிலும்!

எனினும் என்னுள் இருப்பதில்லை அனைத்துயிரும்!
என் பரமாத்ம நிலையை பார்த்திடுவாய்!
யாவற்றையும் உண்டாக்கி தாங்கிடினும்
நிலை பெறுவதில்லை என் ஆன்மா
உயிரினங்களில்!
என் எண்ணத்தில் தோன்றிடும் அனைத்துயிரும்
என்னுள் என்றும் அடக்கம்,
விண் வெளியிற் வீசும் பெருங்காற்று
எப்போதும் இருப்பது போல்!

குந்தி மகனே!
பரமனின் பிரக்ருதியில் யுக முடிவில் சேருகின்றன
அனைத்துயிரும்!
தோன்றச் செய்கிறேன் மீண்டும் அனைத்தையும்
யுகத் துவக்கத்தில்!

இயல்பினால் தன்னிலை யிழந்த உயிர் தொகுதிகளை-
யனைத்தையும்
என் பிரக்ருதியினால்
இடையறாது திரும்பத் திரும்பப் படைக்கின்றேன்
அவரவர் வினைக்கேற்ப!

எந்த பிரக்ருதியினால் படைத்து, காத்து, அழிக்கும்
செயற் தொடர்ந்தாலும்
எந்நிலையிலும் அச்செயல்களின் பாதிப்பு
எனக்கில்லை!
ஒட்டுதலும் ஏதுமில்லை!

வாழ்வியல் சகடம் சுழல, அசைவன,
அசையாதன, மற்றும் உலகனைத்தையும்
தோற்றுவிக்கும், எனைச்
சூழ்ந்து நிற்கும் பிரக்ருதி தலைவனான 
என் காணிப்பில் தான் செயல்புரியும்;
அறிக!
மனித உயிரனத் தலைவனாகவே எனை
எண்ணுவர், என் உயர் நிலையறியாது
அறிவற்றோர்!
எனது யோக மாயையினால் பார் காக்க
மனிதனாய் வந்த எனை
வெறும் பாமரனாய் எண்ணுவர் அவரே!

வீண் ஆசை, வீணடைந்த அறிவு, பயனற்ற செயல்
தத்துவமறியாத உறுதியற்றோர்,
வெறும் அசுரத் தன்மையில் மயக்கமுற்று
பெரும் துன்பம் விளைவிப்பர், பாரினிலே!

இருப்பினும் அர்ஜுனா!

இறைத் தன்மை கொண்ட சான்றோர்
எவ்வுயிரும் என்றும் நிலைத்திருக்க
காரணம் நான்தானென்றும்,
அழிவற்றவன் நான் என்றறிந்து
இடையறாது வழிபடுவர்!

உறுதி நெஞ்சம் கொண்டார் என் பெயர் குணம்
போற்றி, எனை அடைய முயன்று
கருதிக் கருதி வனங்கி எப்போதும்
என் தவநிலையிற் நின்று
வேறெதுவும் நாடாது வழிபடுவர்!

ஞானத் தவத்தினர், ஞான வேள்வியினாற்
நான் வேறு, தான் வேறென்றெண்ணாமலே
வழிபடுவர்!
அஞ்ஞானத்தால் சிலர் பல தோற்றங்களுடைய
எனை
தன்னிலும் வேறாகவே யெண்ணி வழிபடுவர்!

சுருதி கூறும் கருமமும், பெரும் வேள்வியும் நானே!
நீத்தார்க் களிக்கும் திதியும் நானே!
வேள்விப் பொருட்களும் மூலிகையும் நானே!
வேத மந்திரமும் நானே, சொரியும் நெய்யும் நானே!
அக்னியும் நானே, வேள்வியெனும் செயலும் நானே!

உலகை தாங்குவோன் நானே!
உகந்த செயற் பயன் தருவதும் நானே!
உறவில் தந்தை, தாய், பாட்டன்
உலகில் அறியத் தக்கவன் புனிதன் மற்றும்
ஓங்காரம், ருக், யஜூர், ஸாம வேதங்கள்
யாவும் நானே, அறிக!

யாரும் அடையத்தக்க பரமபதம் நானே!
யாரையும் காத்து வளர்ப்பவனும் நானே!
நல்லவை தீயவைப் பார்த்து யாரையும்
ஆள்பவன் நானே!

அனைத்திற்கும் இருப்பிடமும் புகலிடமும் நானே!
கைமாறு கருதாமல் உதவும் நண்பனும் நானே!
உலகை தோற்றுவித்து ஒடுக்குவதும் நானே!
ஊழிக் காலத்தில் உயிரினங்கள் லயமடையும்
நுண்ணிடமும் நானே!
நிதானமும் நிலையானவனும் நானே!
அனைத்திற்கும் அழிவற்ற விதையாகவும் ஆவேன்!

அர்ஜுனா! கதிரோனாய் ஒளிர்பவன் நானே!
அடை மழை பொழிந்து நிற்பதுவும் நானே!
இறவா பெருநிலையானும் நானே!
இகத்தை படைத்து அழிக்கும் காலனும் நானே!
அழிவதும், அழிவற்றதும் நானே!

மறைகள் வரையருக்கும் வேள்விச் செயலினாற்
முறையாக பயன்கள் பல பெற்று
அருந்தும் 'சோம நீரி'னால் பாவம் தீர்க்கும் தூயோர்
சிறப்புற வேள்விகள் புகுந்து மேலுலகு அடைந்து 
அருகாத தெய்வீக சுகங்களிற் மகிழ்வர்!

மறைகள் விதிப்படி பயன் பெறும்
செயல் புரியும் போக விருப்பமுடையோர்
மேலுலகம் சென்று என்றும் அங்கு நிலையின்றி
புண்ணியம் தீர்ந்ததும், திரும்பவும் கீழ் வருவர்!

நாட்ட மேதுமன்றி பயனேதும் கருதாது
இடையறாது எனை நினைத்து,
எட்டாத என்னை அன்பினால் தியானிப்பவர்
அடையச் செய்கின்றேன், யோக சாதனை
தலன்களை!

பயன் கருதி உண்மையான பக்தியில்
பல்வேறு தெய்வ வழிபாடு செய்யும்
பக்தர்கள் உண்மையில் வழிபடுவது எனையே தான்!
இருப்பினும் அது விதிமுறையற்ற அஞ்ஞானமே!
ஏனெனில் யாகமனைத்தையும் ஏற்று தேவர்களை
அடக்கி வைப்பவன் நானே!
ஏனோ நிறைந்து நிற்கும் யான் யாராலும்
அறியப்படுவதில்லை!

தேவர்களை அடைகின்றனர் அவர்களை வழிப்பட்டு!
அதேபோல் பித்ருக்களை வழிப்பட்டு அவர்களை
அடைகின்றனர்!
பூத வழிப்பாட்டில் அதையே அடைகின்றனர்!
ஏதும் தடையின்றி எனையே நிலையாக அடைவர்
எனயே வழிபவோர் மீண்டும் பிறவாமல்!

பயனேதும் கருதாது தூய அன்பினால்
எனக் களிக்கும் இலை, கனி, மலர், நீர்
பலவான அனைதையும் என்
ஸகுண உருவில் ஏற்று அருளுகின்றேன்!

குந்தி மகனே!

எந்த செயலையும், எந்த உணவையும்
எந்த வேள்வியையும், தானம் எதனையும்
எந்த தவத்தையும் நீ செய்கிறாயோ,
அனைத்தையும் சேர்த்துவிடு என்னிடம்!

துறவுத் தவத்தில் செய்வதனைத்தையும்
உறுதியாக எனக்கே அளித்திடும் மனமுள்ள நீ
சிறந்ததான நல்லதையும் சிதைக்கும் தீய
பயன் அனைத்தையும்
அறவே துறந்து எனையே அடைந்திடுவாய்!

எவ்வுயிரிலும் சமமாக நிறைந்து நிற்கும் எனக்கு
வேண்டியவர், வேண்டாதோர் எவருமில்லை!
அன்பு நிறை நெஞ்சுடன் எனை
வழிபடோரிடம் நானும்
என்னிடம் அவர்களும் காணப்படுகிறோம்!

தீய செயற் புரிந்திடினும் வேறேது சிந்தனையன்றி
என் அன்பனாகி வழிபடுவோனாகில் 
தீர்மானமாய் அவனே நல்லோன்!
ஏனெனில் எனையன்றி வேறெந்த சிறந்த
வழிபாடு ஏதுமில்லை யென
உறுதி கொண்டோன், அவன்!

எனையே நம்பிடும் தீயோன் கூட
அறச் செம்மலாவான் விரைவினில்!
என்னரும் பார்த்தா! என் நேயன்
என்றுமே அழிவதில்லை!
இவ் வுண்மையை உறுதியாய்க் கொள்!

அர்ஜுனா!

மகளிர், வைசியர், நான்காம் வருணத்தோர்,
மற்றும் சண்டாளர் என மிக இழித்த பிறப்புடையோரும்
மேலான நற்கதியைப் பெறுவர் எனை
தஞ்சமடைந்தோர், அறிக!

இயல்பிலேயே தூய்மை வாய்ந்த
அறவோர், அந்தணர், ராஜ ரிஷிகள்
எனையே சரணடைந்து பயனடைவர்!
இன்னலே தரும் நலமில்லா, நிலையற்ற 
உடல் கொண்ட நீ
வழிபடுவாய் எனையே, எஞ் ஞான்றும்!

ஒரே நிலை மனத்துடன், பக்தனாகி
எனையே பூஜித்திடுவாய்!
நிறை மனங்கொண்டு, புலனோடு கூடிய
உடலை என்னிடம் ஈடுபடுத்தி
எனையே அடைவாயாக!

9-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
……………………………………………………………………………..No comments:

Post a Comment